Wednesday, February 24, 2010

செவாலியர் அமுதுவின் ஆத்மாவும் ஒளிகளின் இருளகற்றும்.

செவாலியர் அமுதுவின் ஆத்மாவும் ஒளிகளின் இருளகற்றும்.

தமிழின் முதுசமொன்று விதையாகிப்போனதே!
தேடிப்பழகிய உறவொன்று உதிர்ந்து போனதே!!
ஆற்றல் மிகு அன்பு அடங்கிப் போனதே!!!

மேதையே! உங்க‌ள் ம‌ர‌ண‌ச்செய்தி க‌ண்ணுடைத்த‌து,
நெஞ்சுடைக்க‌வில்லை.
வெற்றியென்ப‌தால் வாழ்வை நிறைத்த‌வ‌ர் நீங்க‌ள்.
நிறைவாழ்வு உங்க‌ளுக்கு.

ப‌த்தாண்டுகளின் முன்பு முத‌லாயுங்க‌ள் முக‌ம் பார்த்தேன்.
ஆச்ச‌ரிய‌ நேச‌ம் அள்ளிச் சொரிந்தீர்க‌ள்.

புதின‌மாசிரிய‌ர் புத‌ல்வி மண‌விழா மறு ச‌ந்திப்பு,
ம‌ல‌ர்ந்த‌ நேச‌ம் புரிய‌ச் செய்தீர்க‌ள்.

பாரிஷில் ச‌ரீஷின் நூல் வெளியீடு
பிர‌த‌ம‌ விருந்தின‌ராய்‍ நீங்க‌ள்.
சிற‌ப்பு விருந்தின‌ராய் நான்
நெஞ்சார்ந்த‌ உரையால் நேச‌ம் செய்தீர்க‌ள்.
டாக்டர் இந்திர‌குமார் மறைவு
பாச‌ம் கொண்டு ப‌ற‌ந்து வ‌ருகிறேன்.
விரும்பியே விருந்து வைத்தீர்க‌ள்
டாக்டரை அஞ்ச‌லிக்க‌ அதிகாலையே அழைத்துச் சென்றீர்க‌ள்
என் அருகிருந்தே அஞ்ச‌லித்தீர்க‌ள்‍‍ -இப்பொழுது
முக்கோடி அஞ்ச‌லிக்கிறேன்.

உங்க‌ள் இல்ல‌த்தில் நான்,
வ‌ண்ணை அண்ணா வானொலி தொலை அழைப்பில்,
டாக்ட‌ர் ப‌ற்றி இருவ‌ரும் வான‌ஞ்ச‌லி பொழிகிறோம்.

எம்ரீ செல்வ‌ராசாவுட‌ன் நீங்க‌ள் எழுத்தாளர் ச‌ந்திப்புக்க‌ழைத்துச் சென்றீர்க‌ள்
என்ப‌ற்றி முக‌வுரை முய‌ன்று ப‌கின்றீர்க‌ள்.
இனிய‌ ச‌ந்திப்பில் க‌விய‌ன்ப‌ர் வீட்டில் விருந்திற்க‌ழைக்கிறார்
மிக‌வுய‌ர்ந்த‌ விருந்தில் மேதையே! உங்க‌ளோடு க‌ல‌க்கிறேன்
க‌விய‌ன்ப‌ர் ஒரு ஆச்ச‌ரிய‌ செய்தி சொல்கிறார்
தான் சுஜாதாவைச் ச‌ந்தித்தபோது
க‌ல்லாறு ச‌தீஷின் எழுத்துக்க‌ள் ப‌டித்த‌துண்டா என்றாராம்
என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ உங்க‌ளுக்கும் அது செய்தியாகிற‌து.

மு.நித்தியான‌ந்த‌ன்,முல்லை அமுத‌ன்
எம்ரீசெல்வ‌ராசா உட‌ன் நீங்க‌ளும் நானும் நீண்ட‌ நேர‌முரையாடி
ச‌ர‌வ‌ணப‌வானில் ம‌கிழ்ந்துண்டோம்.

மேதையே இந்த‌ வேலிக்கு க‌தியால் போட்ட‌வ‌ர்க‌ளில்
வைர‌முத்து ப‌ற்றி எழுதியிருப்பீர்க‌ள்
இத‌னை அண்மையில் க‌விப்பேர‌ர‌சு
எங்க‌ள் இல்ல‌ம் வ‌ந்த பொது சொன்னேன்
அமுது புல‌வ‌ரை என‌க்கு ந‌ன்றாக‌த் தெரியும்
சந்தித்துள்ளேன்,பழகியுள்ளேன் மிக‌ப் பெரும் த‌மிழ‌றிஞ‌ர் என்றார்.

நான்கு மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர்
என‌து குடும்ப‌த்துட‌ன் உங்க‌ள் இல்ல‌ம் வ‌ருகிறோம்
என் ம‌க‌ன் ஆத‌வ‌னைத் தூக்கி வைத்து
நீங்க‌ள் காட்டிய‌ அன்பு
எம‌க்காக‌ வாங்கி வைத்து நீங்க‌ள் த‌ந்த‌ ப‌ரிசுக‌ள்- அப்போது
தானும் ப‌ல‌ ப‌ரிசுக‌ளுட‌ன்
எம‌க்காக‌ உங்க‌ள் இல்ல‌ம் வ‌ந்த‌ எம்ரி செல்வ‌ராசா...
ச‌ந்திப்பு முடிகிற‌து

உங்க‌ளுடைய‌ ஆசை என்ன? அது என் கேள்வி
இப்போது இருக்கும் இந்த‌ ஆரோக்கிய‌த்துட‌ன் என் உயிர் பிரிய‌ வேண்டும்
தொண்நூறு வ‌ய‌து கொண்டாடிய‌ மேதையே உங்க‌ள் ஆசையைப் புரிந்து கொண்டேன்.
அத‌னால்த்தான் உங்க‌ள் ம‌ர‌ண‌ம் க‌ண்ணுடைத்த‌து,
நெங்சுடைக்க‌வில்லை

த‌மிழுக்கு விருந்து ப‌டைத்த‌ உங்க‌ளுக்கு
த‌மிழ் விருதுக‌ள் கொடுத்த‌து
த‌மிழ்தாண்டிக்கிடைத்த‌ விருதுக‌ளால்
தமிழ் தவ வலிமை பெற்றது.

ஓராண்டுக்கு முன்னர் எனக்கொரு மடல் வரைந்தீர்கள்‍ ‍
அதில்

நீர் வௌவால் மாதிரி சில விஷயங்களைத்
தலை கீழாய்ப்பார்க்கும் எழுதும் இயல்பு கொண்ட எழுத்தாளன்.
உமது சிந்தனைக் கோடுகள் வித்தியாசமானவை
ஆனால் ஒரு விஷயத்தைக் கிரகிப்பதிலும்
அதன் சாரத்தை வெளிப்படுத்துவதிலும்
நல்ல ஆற்றலை மட்டிட்டேன்.
இப்படி இரு பக்கத்தில் எனக்கு நிறைய உயிச்சத்தூட்டினீர்கள்.
என் கண்களில் ஒற்றிக் கொள்ளும் உங்கள் கடிதத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.
ஐயா நிறப் படமாய் உங்களின் நிஜவுருவம் என் கண்முன்னே கனக்கிறது.

மேகங்களைப் பார்க்கிறேன் உங்கள் வாசம் அங்கே தெரிகிறது.

மேதையே அனைத்துக்கும் நன்றி

என் மேல் வீசும் தென்றலில் உங்களைத் தரிசிப்பேன்.

முக்கோடி அஞ்சலிகளுடன்

கலாநிதி சதீஷ். 23.02.2010 சுவிற்சர்லாந்து.