Sunday, April 18, 2010

இணையத்தளங்களும் எமது இளைஞர்களும்



CERN - European Organization For Nuclear Research
அணு ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பான "செர்ன்" சுவிட்சர்லாந்துக்கும், பிரான்சுக்கும் இடையிலான எல்லையில் ஜெனீவாவில் மையம் கொண்டுள்ளது. இங்கிருந்து தான் 6 ம் திகதி, ஓகஸ்ட் மாதம், 1991 ம் ஆண்டு, முதன்முதலாக பொது மக்களுக்கான World Wide Web என்கிற உலகம் தழுவிய இணையவலைப் பின்னல் www எனும் மூன்று எழுத்துகளால், சர்வதேசத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டது. www எனும் இணையவலை மந்திரத்தைக் கண்டுபிடித்தவர், ஆங்கில விஞ்ஞானியான தீம் பேரனர் லீ (1989) என்று மகிழ்ச்சியோடு நினைவுகூரலாம்.


மனித குலம், ஆரவாரித்து மகிழ்ந்து கொண்டாடி வரவேற்று, புளங்காகிதமடையும் எல்லையின் உச்சத்தை தொட்ட மிகப்பெரும் கண்டுபிடிப்பு இணையம், எனும் Internet என்றால் அதற்கு மாற்றேதுமில்லை. மனித வாழ்வை மிகுந்த சௌகரியங்களுக்குள் கொண்டு தந்தது இணையம். சொல்ல முடியாத முகவரியையும், ஒரே சொல்லில் செய்து தந்தது இணையம்.


இணையத்தின் பயன்பாடுகள், எல்லையில்லா நன்மைகளை மனித வாழ்வுக்கு அள்ளி வழங்குகிறது. இணையத்தின் மூலமாக, இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்தத் தகவலையும், எந்த நேரத்திலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெறுகிறாம். பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று வெவ்வேறாக இருந்த அனைத்தையும் ஒன்று படுத்திய, பலதின் ஒன்றாக இணையம், உலகின் உன்னதமாக இருக்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையாக மட்டுமின்றி, ஆய்வு நிறுவனங்கள் வரை கற்றறிய வேண்டிய அனைத்தின் பொக்கிசமாக இணையம் உள்ளது.


நாள் தோறும், இணையம் புதுப்புது வளர்ச்சிகளைக் கண்டு கொண்டே செல்கின்றது. நாள்தோறும் இணையப் பாவனையாளர்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றார்கள். கடந்த மார்ச் மாதம் (2008 ) அன்றைய கணக்கின் படி இதுவரை 1.407 பில்லியன் மக்கள் இணையப் பாவனைக்கு வந்து விட்டார்கள். இது உலக சனத்தொகையின் 21 .1 வீதமென்பது கணக்கில் கொள்ளப்பட்டால், கடந்த எட்டாண்டுகளில் மட்டும் இணையப் பாவனையாளர்கள் 290 வீதம் அதிகரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படி உலகத்தின் இதயமாக வலம் வரும் இணையத்தை, ஒவ்வொருவரும் தங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிறைந்த வாழ்க்கையின் உச்சத்திற்கும் பயன்படுத்தும் போது, நிச்சயமாக மனிதன் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியும். புலம்பெயர் தமிழ் சமூகம் இவற்றை சிறப்பாக கையாண்டு, வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டு நடைபோடும் மகிழ்ச்சியான செய்திகளினூடே, எமது மனங்களைக் காயப்படுத்தும், பெற்றோர்களின் உள்ளங்களைக் குத்திக் கிழிக்கும், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாகும், சம்பவங்களும் இந்த இணையத்தை தவறாகக் கையாளும் இளைஞர்களிடமிருந்து தோற்றம் பெற்றுள்ளதை வேதனையோடு சுட்டிக் காட்டுவதுடன், எங்குமே அறிய முடியாதெனும், எண்ணத்துடன் இணையங்களில் தங்களின் அந்தரங்க செய்திகளை, அவதானமின்றி அனுப்புவதன் மூலமாக, தனது அந்தரங்கம் என்று கொண்டவைகள், வெளி அரங்கமாக இணைய வலைகளில் உலா வரும் போது, இதனால் மனமுடைந்து, மன நோயாளிகளாக மாறுகின்ற அவலத்தையும் சிலர் செய்யும் போது, இது விபத்தை நாமே விரும்பி உருவாக்குவதற்கு சமமானது என்று சொல்லத் தோன்றுகிறது.






0 comments: