Tuesday, December 30, 2008

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது - நந்தவனம் சிறப்பிதழ்


கல்லாறு சதீஷ் குறித்து வெளிவந்துள்ள நந்தவனம் சிறப்பிதழ் பற்றிய விமர்சனக் கண்ணோட்டம் - வீரகேசரி

எழுத்தாளராக மட்டுமல்ல சிறந்த கவிஞர், சிறந்த சமூக சேவகர் என பல தளங்களில் தன்னை அடையாளப்படுத்தி மனித நேயம் உள்ள மனிதராகத் திகழும் இவரை நந்தவனம் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம் என்று இதழின் பிரதம ஆசிரியர் த. சந்திரசேகரன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

"வெற்றி பெறுவோம்" என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இருக்கிறது எனும், கல்லாறு சதீஷ், த. சந்திரசேகரனுக்கு வழங்கிய நேர்காணலும், நானும் கல்லாறு சதீஸ்கும் எனும் பிரான்ஸ் எழுத்தாளர் வண்ணைத் தெய்வத்தின் கட்டுரையும் கல்லாறு சதீஷ் ஒரு நடமாடும் பாடசாலை எனும் மேடை வானொலி, தொலைக்காட்சி நடிகர், பிரான்ஸ் சின்னக்குட்டி ரி. தயாநிதியின் கட்டுரையும், சிப்பிக்குள் இருக்கும் முத்து, சிந்தனை முதிர்ந்த தமிழ்வித்து கல்லாறு சதீஷ் என்னும் முகத்தார் எஸ் யேசுரட்ணத்தின் கட்டுரையும், எனது மண்ணின் மைந்தன், எனும் அவுஸ்Tகிரேலியா செந்தமிச் செல்வர் பாடுமீன் சு. சிறிகாந்தராசாவின் கட்டுரையும், இந்த இதழை சிறப்பு செய்வதுடன் கல்லாறு சதீஷ் எனும் மனிதனின் உள்ளத்தைப் பற்றியும் பேசுகிறது.

லண்டனைச் சேர்ந்த சர்வதேச அகதிகள் நிறுவனத்தின் தலைவர் வ.மா. குலேந்திரன் கல்லாறு சதீஷைப் பற்றி படைத்த கவிதையும், நான் கல்லாறு சதீஷின் ரசிகன் எனும் வேளை தமிழ்வாணனின் முன்னுரையும், பனிப்பாறைகளையும் உடைக்கும் கண்ணீர்த்துளி எனும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னுரையும் இன்னும் இந்த இதௌக்கு சிறப்புச் செய்கிறது. முன்னாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் சரிபாதி சபாரட்ணம் "கல்லாறு சதீஷுக்கு சிறந்த இலக்கியவாதி என்ற ஒருமுகம் இருந்தாலும், அவரை நான் சமூக சிந்தனைவாதியாகத்தான் பார்க்கிறேன் அவரைப் பற்றி ஒரேவரியில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டார். "சமூகத்தின் யதார்த்தத்தை சிந்திக்கத் தூண்டும் படைப்பாளி" என்று கல்லாறு சதீஷ் பற்றி காந்தன் குருக்கள் மட்டக்களப்பிலிருந்து குறிப்பிட்டுள்ளார்.

இலன் மீன்கள் வாழும் குளம் தெரிந்த கொக்கு சிறுத்தைகள் வாழும் குகை தெரிந்த வீரன் முளைகளைப் பார்த்தே விளைச்சலைச் சொல்லு உழவன் போல தலை பௌக்காத அறிவு பழுத்த கிழம்" என்று மிக அழகாகக் கல்லாறு சதீஷைப்பற்றி எழுதியுள்ளார் வண்ணைத் தெய்வம். பத்திரிகைகளில் அவரது படங்களைப் பார்த்திருக்கின்றேன். யார் இந்த சதீஷ் என்று வியந்திருக்கின்றேன். அண்மையில் அவர் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன். எப்போதும் முகத்தில் எவரையும் வசீகரிக்கும் புன்சிரிப்பு, அழகான நிதானமான தமிழ் உச்சரிப்பு, எந்த விசயத்தையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் அறிவு முதிர்ச்சி, இளமையில் புலைமைபெற்ற திறமைக்குரியவர். அத்தகையவருக்கு இளைஞர்களைச் செந்நெறிப்படுத்துவதை முதன்மை நோக்காகக்கொண்டு இலக்கியப் பணி செய்துவரும் இனிய நந்தவனம் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவது மிகவும் பொருத்தமானது. இந்தச் சிறப்பிதழால் தம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை இளைஞர்களுக்கு ஏற்படட்டும். அந்தவகையில் சதீஷின் தடயங்களால் தமிழினம் பயனுறட்டும் என்று தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பாடும்மீன் சு.சிறிகாந்தராசா மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை கல்லாறு சதீஷின் வதைகளின் வாழ்விலிருந்து கண்டெடுத்து, மீண்டும் வளர்ந்து நிற்கும் வாழ்வில் தடம்பதித்து அழகிய இதழ் செய்துள்ள நந்தவனம் பாராட்டுக்குரியது.



Saturday, December 27, 2008

தவிக்கவிட்டு மறைந்ததேனோ - தமிழா!


டாக்டர் இந்திரகுமார் ஒரு நினைவு வெள்ளம் "ஒரு இதய ஏட்டில் இருந்து கல்லாறு சதீஸ்

"வாழ்வு பற்றியும் மரணம் பற்றியும் புரிதல்"

எப்படியிருந்தாலும் பழகிய உறவொன்று
மறைந்த செய்தி வருகையில், உடலும், உள்ளமும்
எப்படி நொடிக்கப்படுகிறது. ஏன்
என்று மட்டும் இன்னும் புரியவேயில்லை.
நேசம் நெஞ்சுக்குள் ஊடுருவி ஆழப்
பதிந்ததனாலா? அவர்! நினைவுகள் மனதெல்லாம்
மகுடமிட்டுக் கொண்டதனாலா? அவர் ஆளுமை
எமக்குள் தோற்றுவித்த வியப்பினாலா?
டாக்டர் இந்திரகுமார்! உச்சரிக்கும் பொழுதே
இப்பெயர், தமிழும், அறிவும், ஆளுமையும்
அப்படியே எமக்குள் தந்துவிடும் தவமாகவல்லவா
தோன்றுகிறது. அறுபத்திமூன்று வயதுக்குள், டாக்டர்
இந்திரகுமார், இந்தப் பூமிப்பந்தில், தமிழ் என்னும்
மொழிப்பந்தலில் பதித்துச் சென்ற தடயங்கள் எத்தனை எத்தனை?
1999ம் ஆண்டு, முதன் முதலாக டாக்டர்
இந்திரகுமார் அவர்களைச் சந்தித்த போது
எனக்குள் பரவசம் "வாடைக்காற்று" எனும்
இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1978ம் ஆண்டு
வெளியிடப்பட்ட திரைப்படத்தின் கதாநாயகனைச்
சந்திக்கின்றேனே என்று புழகாங்கிதம்
ஒரு திரைப்படக் கதாநாயகன் என்பதனை விட,
அவரின் பல்துறை வித்தகங்கள் என்னை வியப்பிலாழ்த்தியது
ஒரு மனோதத்துவ டாக்டராக, புகழ்மிக்க எழுத்தாளராக, மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக, இனிய ஒலிபரப்பாளராக.....
டாக்டர் இந்திரகுமார், நீங்கள் தமிழுக்கு தந்த
முகங்கள் எத்தனை? ஆளுமையின் சிகரமே இன்று அடங்கிப் போனதெப்படி?
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நீங்களும்,
நானும் அதிகமாக உரையாடிக்கொண்டோம்
அநேகமாக மாலைப்பொழுதுகளில் தொலைபேசியில்
அழைப்பீர்கள். ஒருமணிநேரம் பேசிக்கொண்டோம்
ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தருடன் பேசியது
போன்ற மகிழ்ச்சியிருக்கும். முதலிலெனக்கு
இலக்கியம், தத்துவம், மருத்துவம், தமிழ், தமிழ்த்தேசியம், விண்ணியம் என்று
எத்தனை துறை சார்ந்த எனக்கு போதனை செய்துள்ளீர்கள்?
தமிழின் அரிய பொக்கிசமே! அறிவின் விருட்சமே! இப்போது மீண்டும் ஒலிக்காதா
உங்கள் குரல், இப்போது மீண்டும் எழுதாதா உங்கள் விரல்?
நான் தேடினேன் "எங்கே நீங்கள்" என்று
தேடினேன் ஏழு மாதங்கள் இந்தியாவிலே நீங்கள்
இருந்ததாக அறிந்தேன். மீண்டும் பேசுவேன் உங்களிடமிருந்து
இன்னும் அறிவூட்டப்படுவேன் என்றே எண்ணியிருந்த எனக்குள்
இடியாக இறங்கியது உங்களின் இறப்புச் செய்தி.
"ஸ்கைலாப்" எனும் விண்கலம், கட்டுப்பாடிழந்து,
பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதனை, இலங்கை
வானொலியில் நீங்கள் தான் நேரஞ்சல் செய்தீர்கள்.
'இதோ! விழுகிறது. இந்து சமுத்திரம்
கடலில் விழுந்தே விட்டது' என்று மனித குலம்
மகிழ்ச்சிப்பட்ட செய்தியை ஒலிபரப்பியவரும் நீங்களே!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த
திரைப்படமான "வாடைக்காற்று" திரைப்படத்தின் கதாநாயகனும் நீங்களே!
சுவிஸ் தமிழர் பேரவையின் நமச்சிவாயம்
அவர்கள் கதாநாயகனாக நடித்த "குற்றவிளக்கு"
திரைப்படத்தைப் பார்வையிட்டேன். அதே போல்
நீங்கள் நடித்த 'வாடைக்காற்று' திரைப்படத்தின்
பிரதியுள்ளதா? என்று உங்களைக் கேட்டேன்
நானும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
கனடாவிலுள்ள கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனிடம்
உள்ளதாக அறிகிறேன். கிடைத்தால் அனுப்புவேன்
என்றீர்கள். இனிக் கிடைக்குமா? உங்களை
30 ஆண்டுகளுக்கு முன்னரேனும் மீண்டும் பார்க்க ஆசை
விண்ணிலிருந்து மண்ணுக்கு, நீங்கள் எழுதிய
அற்புத நூல் இலங்கையின் சாகித்திய அகதமி விருதைப் பெற்றதே!
'விண்வெளியில் வீரகாவியம்' தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றதே
'டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?'
'வயகராவும் ஏனைய சிகிச்சை முறைகளும்' என்று எத்தனை விஞ்ஞான தமிழ் நூல்கள்? உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பு மிகு
பதவியிலிருந்து, தமிழருக்கென்ற தனித்துவம் தேடு
உங்களின் இறுதிக்காலம் கடந்தறிந்து மகிழ்ச்சி கொண்டேன்
இன்று பிரிந்த செய்தி கேட்டு துயரம் கொண்டேன்
கலை உலகின் வித்தகியாகிய உங்களின் மனைவி
விஜயாம்பிகை, உங்கள் அன்புமகள், மருமகன்,
உறவினர்கள், உற்றார், இனிய நண்பர்கள் என்று அனைவருக்கும்
'இந்த நேரமும் கடந்துபோகும்" என்று என்
மனராஞ்சலியை நிறைவு செய்கின்றேன்.

Wednesday, December 10, 2008

கல்லாறு சதீஷ் அவர்களின் "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன" - நா. கண்ணன் ஜெர்மனி

பெரும்பாலோருக்கு பள்ளிப்படிப்பே அதிக படிப்பாக அமைந்துவிடுகிறது. இவர்கள் வேறொரு நாட்டில் வாழத் தலைப்படும் போது பல்வேறு முரண்பாடுகள் வாழ்வில் வந்து சேருகின்றன. முன்பு வாழ்ந்த கிராமத்தில் "பையனை நன்றாக அடித்து வளருங்கள்" என்று வாழ்ந்துவிட்டு சுவிஸ் வாழ்வில் குழந்தைகளைக் கைநீட்டி அடிக்கக் கூடாது என்றால் இவர்களுக்குப் புரிவதில்லை. குழந்தைகளைத் திருத்துகிறேன் என்று கைநீட்டி அடிக்கப் போய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபடும் போது இவர்களால் இந்தப் புது வாழ்வைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. பொம்பளப் பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் தாய் தந்தை பேச்சுக் கேட்டு, 'பொம்பள சிரிச்சாப் போச்சு! பொகையிலை விரிஞ்சாப் போச்சு' என்றொரு வாழ்வை தங்கள் நாட்டில் வாழ்ந்துவிட்டு இங்குவந்து பெண்கள் சுதந்திரமாக ஆண் பிள்ளைகளுடன் பழகுவதையும், வீதியோரங்களில், தெருக்களில் முத்தம் இட்டுக்கொள்வதையும் பார்க்கும்போது பாதிப்பெற்றோரின் அடிவயிறு நெருப்புச் சுட்டுச் சுட்டு கன்றிப்போயுள்ளது!. சிறுவர்களையே அடிக்கமுடியாதபோது, பெண்பிள்ளைகளை கைநீட்டி அடிக்க முடியுமா? அகதிவாழ்வு குழந்தைகளுக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு பெற்றோரை தண்டித்துவிடுவதாகவே பலர் நினைக்கின்றனர். இந்த வாழ்வின் அடர்த்தியை எதிர்கொள்ள முடியாத பலரின் வாழ்வு கைமீறிப் போகும் போது வன்முறைக்குள் இறங்கி விடுகின்றனர். இந்த வன்முறைகள் ஐரோப்பிய அரசாங்கங்களால் கடுமையாக தண்டிக்கப்படும்போது பல அகதிக் குடும்பங்களின் வாழ்வு சின்னா பின்னமாகி விடுகிறது! இதையெல்லாம் பாசாங்கில்லாமல் தன் கதைகளில் சித்தரிக்கின்றார் சதீஷ்.

திருமண வயது வரும்போது சிக்கல் இன்னும் கூடுகிறது! சுதந்திரமாக வளர்ந்த பெண்கள் பெற்றோர் சொல்லும் பையனைத் திருமணம் முடிப்பரா என்ற கேள்வி? சர்வ சுதந்திரமாக வளரும் பெண் ஒரு தமிழ் ஆணின் ஈகோவைப் பாதிக்காத வண்ணம் கட்டுப்பட்ட பெண்ணாக வாழ்வை நடத்துவாளா என்பது ஆணின் பிரச்சினை, எனவே தமிழ்ப் பையன்கள் இலங்கையிலிருந்து புரோக்கர்களின் மூலமாகப் பெண்களைத் தேர்வு செய்கின்றனர். இந்தப் பெண்ணை மாட்டுத்தாவணியில் மாட்டைக் கிரயம் பேசி வாங்குவது போல் கிரயம் பேசித்தான் வாங்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பணத்துடன் குறிப்பிட்ட காலத்தில் பையன் வந்து பெண்ணை வாங்கிக்கொண்டு செல்வதாக ஏற்பாடு. சதீஷ் கதைகளை வாசிக்கும்போது அகதி வாழ்வின் தண்டனைகள் நம்மை செயலிழக்கச் செய்கின்றன. தாம்பத்தியம் என்பது மாட்டுவியாபாரம் அல்ல. தம்பதியருக்குள் புரிந்துணர்வு தேவை. எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் வரும் பெண் அகதிகள் வாழும் வாழ்வைக் கண்டு சோர்வுற்று, கதிகலங்கி சிதறிப்போவதும் உண்டு. அகதிகளின் முக்கிய பிரச்சினை குடி. அமெரிக்காவை வெள்ளையர் ஆக்கிரமித்து, அங்குள்ள பூர்வகுடிகளை 'ரிசர்வ்' என்னும் முகாம்களில் வைத்து உதவித் தொகை கொடுத்தபோது பெரும்பாலோர் குடிகாரர்களாய் மாறிப் போயினர். இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு, துள்ளித் திரிந்த இயல்பான வாழ்வு பறிக்கப்பட்டபோது அமெரிக்க இந்தியர்கள் குடிகாரர்களாய் மாறிப் போயினர். இதே கதிதான் பெரும்பாலான இலங்கைத் தமிழர்களுக்கு இன்று நடந்துகொண்டு வருகிறது. குடியினால் வரும் குடும்பப் பிரச்சினை மணமுறிவிற்கு இட்டுச் செல்கின்றன!. ஆண்கள் ஆண்மை இழந்து சிறைகளிலும் பூங்காக்களிலும் வாழ்வைக் களிக்கின்றனர்.

இதையெல்லாம் தாண்டி அகதிகள் தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்போது, ஒரு வறட்டுக் கெளரவம் தங்கள் வாவில் புகுந்து விடுகிறது! கவலையை மறக்க அடிக்கடி பார்ட்டிகள் வைக்கின்றனர். பார்ட்டிகள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு, முடியும்போது அளவுக்கு அதிகமான உணவு கழிவாக நிற்கின்றது. ஒருபுறம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாழ்வின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும் சொந்த நாட்டு சகோதர சகோதரிகளின் வாழ்வு! மறுபுறம் இவையெல்லாம் அறிந்தும், தங்கள் சொந்த சோகங்களை மறைக்க செயற்கையான வசதிகளை உருவாக்கிக் கொண்டு உணவுப் பொருட்களை விரயம் செய்யும் பாசாங்குத்தனம். இவையெல்லாம் சதீஷால் பேசப்படுகின்றன.


அதேநேரத்தில் சதீஷ் பிரமாண்டமான கனவுகளை தங்கள் சமூகத்தில் விதைக்க எண்ணுகிறார். கல்வியைக் கொண்டாடும் தெய்வமாகப் பேணும் ஒரு இந்து சமூகத்தில் பிள்ளைகள் படித்து முன்னேறுவது என்பது இயல்பாக நடைபெறுகிறது. இருப்பினும் அவர்களை உலகின் ஆகச் சிறந்த பரிசுகளுக்கு தயார்படுத்த இவர் கதைகள் முனைகின்றன. விண்ணிற்குக் குறி வைத்தால் வீட்டு மாடிக்காவது ஏறமுடியும் என்று சொல்வதுபோல் இவரது கதைகள் தன்னம்பிக்கை ஊட்ட முயல்கின்றன.

இணையம்(INTERNET) போன்ற புதிய தொழில் நுட்பங்கள் அகதிகள் வாழ்வில் நுழையும் போது ஏற்கனவே சுழல்கள் கொண்ட வாழ்வு, இன்னும் வேகத்தில் பாய்கிறது, இந்தப் பாய்ச்சலில் அலைமோதும் இளைஞர்களின் வாழ்வைப் பற்றியும் இவர் பேசுகிறார்.

சதீஷின் கதைகள் பலரின் பிரம்மைகளை, பிம்பங்களை உடைக்கின்றன. இலங்கையில் உட்கார்ந்து கொண்டு 'அவனுக்கு என்ன வெளிநாட்டில் செளகர்யமாக வாழ்கிறான்' என்று எண்ணும் உள்நாட்டுக்காரர் இவர் கதைகளைப் படித்தால் ஏஜெண்டைப் பார்த்து வெளிநாட்டில் டிக்கெட் எடுக்கும் முன் இருமுறை யோசிப்பர். இரண்டாவது, இவர் கதைகளை ஒரு சுவிஸ் நாட்டுக்காரன் வாசித்தால், அடப் பாவமே! இவர்களுக்கு நாம் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டது, அனுபவிக்க அல்ல, அவதியுறத்தானா? என்று வியப்புறுவான்.

புகலிட வாழ்வின் அத்தனை சோகங்களும் இன்னும் பதிவுறவில்லை. வெளிநாடு கிளம்புவதற்குள் ஈழத்தில் படும் அவதிகள், சிதைவுறும் குடும்பங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவை முறையாகப் பதிவுறவில்லை. மிகுந்த சிரமத்தினூடேதான் ஒரு அகதி பயன்படுகிறான். பயணத்தின் எந்த நிலையிலும் சிறையுறலாம். ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படலாம். ஈழத்து சிறை அனுபவங்களைப் பேசும் அளவிற்கு இவர்களது படைப்புக்கள் வெளிநாட்டுச் சிறை அனுபவங்களைப் பேசுவதில்லை. ஈழத்துச் சிறைக்கொடுமைகள் இங்கு இல்லாது இருக்கலாம். ஆயின் ஒரு அகதிபடும் உளவியல் அவதிகளை அகதியன்றி யார் சொல்வது? மேலும் பயணத்தில் உள்ள சிக்கல்கள், பட்ட கஷ்டங்கள் , தாண்டிய மலைகள், நீந்திய ஆறுகள், கடந்த பனிவயல்கள் எத்தனை, எத்தனை? இது பற்றி புகலிட இலக்கியம் என்று பேசும்?


சதீஷின் எழுத்தைப் படிக்க கோனார் நோட்ஸ் அவசியமில்லைதான். ஆனால் கோனார் நோட்ஸை யாரும் செவ்விலக்கியம் என்று சொல்வதில்லை.





நா. கண்ணன் , ஜப்பானிலும் இந்தியாவிலும் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
ஜேர்மனியில் விஞ்ஞனியாகப் பணியாற்றிய டாக்டர் நா. கண்ணன் தற்போது தென்கொரியாவில் இயற்பியல் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.
கல்லாறு சதீஷின் நண்பரான டாக்டர் நா. கண்ணன் இணையத்தில் தமிழ்ச்சேவை செய்வதில் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 9, 2008

கல்லாறு சதீஷ் அவர்களின் "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன" - நா. கண்ணன் ஜெர்மனி


ஜூன் 1 அன்று சுவிட்சர்லாந்தின் லூசேர்ண் நகரில் லூசேர்ண் தமிழ் மன்றம் நடாத்திய விழா மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் புகலிடத் தமிழர்கள் வாழும் ஐரோப்பாவில் தமிழர்கள் கூடுவது கேளிக்கை நிகழ்ச்சிகள் நிரம்பிய கூட்டத்திற்கே. இவ்வகையில் தமிழ் சினிமாவின் ஆதிக்கம் அளவிட முடியாத ஒன்று. ஆனால் இம்மன்றம் நடத்திய விழாவோ, கல்லாறுசதீஷின் "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன" என்ற புத்தக வெளியீட்டுடன் கூடிய அறிவியல், கலை இலக்கிய விழா.

பெரும்பாலும் புத்தக வெளியீடுகள் தனியாக நடக்கும், புத்தக ஆசிரியரும், பதிப்பாளரும், இலக்கிய ரசனை உள்ள ஒரு சிறு கூட்டமும் இவ்விழாவில் கலந்துகொள்ளும். மிக முற்போக்கு என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் சபையில் இன்னும் சிறு கூட்டம், பெரும் சர்ச்சைகள், விவாதம், வசவுகள், மிரட்டல்கள் என்று இருக்கும். ஆனால் இவர்கள் நடத்திய விழாவில் ஏறக்குறைய 300 பேர்கள் கலந்துகொண்டனர். (4 திருமணங்கள் அன்று இல்லாதிருந்தால் இக்கூட்டம் இன்னும் அதிகமாக வந்திருக்கும் என்று அறியப்படுகிறது!) விமர்சனம் இருந்தது, விவாதாம் இல்லை. வாழ்த்துக்கள் இருந்தன வசவுகள் இல்லை. மீள்பார்வை இருந்தது மிரட்டல் இல்லை. இந்தியாவிலிருந்து கைக்காடுபோட்டு பதிப்பகத்தார் பல புத்தகங்களுடன் வந்திருந்தார்.

நிகழ்ச்சியின் இடையில் கிடைத்த நேரத்தில் புத்தகக் கண்காட்சி இருந்த சிறு அறை நிரம்பி வழிந்தது. இவையெல்லாம் ஆரோக்கியமான குறிகள்.

கல்லாறு சதீஷ் ஒரு துடிப்புள்ள இளைஞர். 90களின் ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து இடப்பெயர்வுற்று சுவிட்சர்லாந்தில் வதிவிடம் வேண்டி வந்த ஒரு இளம் அகதி. வேட்டை நாய்களை வைத்து முயல்களைப் பிடிப்பது போல் சமூகத்தின் தீயசக்திகளை வைத்து தமிழ் இளைஞர்களை இலங்கையில் வேட்டையாடியபோது மாட்டிக்கொண்ட முயல் அவர். கொடுமைகள் அனுபவித்து, குதறப்பட்ட நிலையில் வெளிநாடு வந்து சேர்ந்தார். கை நகங்கள் பிடுங்கப்பட்டு, விரல் எலும்புகள் முறிவுபட்ட நிலை. வாடி இருக்க வேண்டியவர். வாடவில்லை. துள்ளி எழுந்து தன்னைப் போல் அகதிகளாய் அல்லலுறும் லட்சக்கணக்கான அகதிகளின் வாழ்வை அவர்படும் அவதியை உலகிற்குச் சொல்லத் தலைப்பட்டுள்ளார். இலங்கை அரசு இன்னுமொரு அகதியை உருவாக்கிவிட்டு பெருமை கொள்ள முடியாதவாறு, ஒரு அகதியை உருமாற்றம் செய்து எழுத்தாளனாக மாற்றிவிட்டார் கல்லாறு சதீஷ்.

இவர் எழுத்து பொய்யின்றி, புனைவின்றி அப்பட்டமாக அகதிகளின் சமூக அவலங்களைச் சித்தரிக்கின்றது. கட்டாற்று வெள்ளத்தைக் கவிதைபாடு என்று சொல்லமுடியாது போல் இவரது கதைகளை நவீன, பின் நவீனத்துவ, மாந்திரீக யதார்த்தப் படைப்புக்களாக ஏன் வரவில்லை என்று கேட்க முடிவதில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என்பதுபோல் அமைந்துவிட்ட அகதி வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகள் கொண்ட கதைத்தொகுப்பு "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன". இலங்கை வாழ்வை நோக்கும் போது சுவிஸ் புகலிட வாழ்வு என்பது ஒரு சொர்க்கம் தான். ஆயினும் தானொரு சுவிஸ்காரன் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாத இரண்டாம், மூன்றாம் குடி வாழ்வு. குளிர்காலத்தில் வெறும் 'மேலாக' ஒரு சட்டை போட்டுக்கொண்டால் போதும் என்னும் வெப்ப நாட்டிலிருந்து பனிப்பாறைகள் சூழ்ந்த சுவிஸ் வாழ்வில் குளிர் இவர்கள் வாழ்வைக் குடிப்பதாக நம்புகிறார் சதீஷ். சொர்க்கத்தில் அமரவைத்து அங்கும் அகதிகளுக்கு கிடைப்பது தண்டனையே என்று அழகாகச் சொல்கிறார் சதீஷ். தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் புனைவைத் தவிர்க்கிறார். ஆனால் சிக்கல்கள் நிரம்பிய புலப்பெயர் வாழ்வை சரியாகவே தனது கதைகளில் சித்தரிக்கின்றார்.




தொடரும்