ஜூன் 1 அன்று சுவிட்சர்லாந்தின் லூசேர்ண் நகரில் லூசேர்ண் தமிழ் மன்றம் நடாத்திய விழா மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் புகலிடத் தமிழர்கள் வாழும் ஐரோப்பாவில் தமிழர்கள் கூடுவது கேளிக்கை நிகழ்ச்சிகள் நிரம்பிய கூட்டத்திற்கே. இவ்வகையில் தமிழ் சினிமாவின் ஆதிக்கம் அளவிட முடியாத ஒன்று. ஆனால் இம்மன்றம் நடத்திய விழாவோ, கல்லாறுசதீஷின் "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன" என்ற புத்தக வெளியீட்டுடன் கூடிய அறிவியல், கலை இலக்கிய விழா.
பெரும்பாலும் புத்தக வெளியீடுகள் தனியாக நடக்கும், புத்தக ஆசிரியரும், பதிப்பாளரும், இலக்கிய ரசனை உள்ள ஒரு சிறு கூட்டமும் இவ்விழாவில் கலந்துகொள்ளும். மிக முற்போக்கு என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் சபையில் இன்னும் சிறு கூட்டம், பெரும் சர்ச்சைகள், விவாதம், வசவுகள், மிரட்டல்கள் என்று இருக்கும். ஆனால் இவர்கள் நடத்திய விழாவில் ஏறக்குறைய 300 பேர்கள் கலந்துகொண்டனர். (4 திருமணங்கள் அன்று இல்லாதிருந்தால் இக்கூட்டம் இன்னும் அதிகமாக வந்திருக்கும் என்று அறியப்படுகிறது!) விமர்சனம் இருந்தது, விவாதாம் இல்லை. வாழ்த்துக்கள் இருந்தன வசவுகள் இல்லை. மீள்பார்வை இருந்தது மிரட்டல் இல்லை. இந்தியாவிலிருந்து கைக்காடுபோட்டு பதிப்பகத்தார் பல புத்தகங்களுடன் வந்திருந்தார்.
நிகழ்ச்சியின் இடையில் கிடைத்த நேரத்தில் புத்தகக் கண்காட்சி இருந்த சிறு அறை நிரம்பி வழிந்தது. இவையெல்லாம் ஆரோக்கியமான குறிகள்.
கல்லாறு சதீஷ் ஒரு துடிப்புள்ள இளைஞர். 90களின் ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து இடப்பெயர்வுற்று சுவிட்சர்லாந்தில் வதிவிடம் வேண்டி வந்த ஒரு இளம் அகதி. வேட்டை நாய்களை வைத்து முயல்களைப் பிடிப்பது போல் சமூகத்தின் தீயசக்திகளை வைத்து தமிழ் இளைஞர்களை இலங்கையில் வேட்டையாடியபோது மாட்டிக்கொண்ட முயல் அவர். கொடுமைகள் அனுபவித்து, குதறப்பட்ட நிலையில் வெளிநாடு வந்து சேர்ந்தார். கை நகங்கள் பிடுங்கப்பட்டு, விரல் எலும்புகள் முறிவுபட்ட நிலை. வாடி இருக்க வேண்டியவர். வாடவில்லை. துள்ளி எழுந்து தன்னைப் போல் அகதிகளாய் அல்லலுறும் லட்சக்கணக்கான அகதிகளின் வாழ்வை அவர்படும் அவதியை உலகிற்குச் சொல்லத் தலைப்பட்டுள்ளார். இலங்கை அரசு இன்னுமொரு அகதியை உருவாக்கிவிட்டு பெருமை கொள்ள முடியாதவாறு, ஒரு அகதியை உருமாற்றம் செய்து எழுத்தாளனாக மாற்றிவிட்டார் கல்லாறு சதீஷ்.
இவர் எழுத்து பொய்யின்றி, புனைவின்றி அப்பட்டமாக அகதிகளின் சமூக அவலங்களைச் சித்தரிக்கின்றது. கட்டாற்று வெள்ளத்தைக் கவிதைபாடு என்று சொல்லமுடியாது போல் இவரது கதைகளை நவீன, பின் நவீனத்துவ, மாந்திரீக யதார்த்தப் படைப்புக்களாக ஏன் வரவில்லை என்று கேட்க முடிவதில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என்பதுபோல் அமைந்துவிட்ட அகதி வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகள் கொண்ட கதைத்தொகுப்பு "சொர்க்கங்களும் தண்டிக்கின்றன". இலங்கை வாழ்வை நோக்கும் போது சுவிஸ் புகலிட வாழ்வு என்பது ஒரு சொர்க்கம் தான். ஆயினும் தானொரு சுவிஸ்காரன் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாத இரண்டாம், மூன்றாம் குடி வாழ்வு. குளிர்காலத்தில் வெறும் 'மேலாக' ஒரு சட்டை போட்டுக்கொண்டால் போதும் என்னும் வெப்ப நாட்டிலிருந்து பனிப்பாறைகள் சூழ்ந்த சுவிஸ் வாழ்வில் குளிர் இவர்கள் வாழ்வைக் குடிப்பதாக நம்புகிறார் சதீஷ். சொர்க்கத்தில் அமரவைத்து அங்கும் அகதிகளுக்கு கிடைப்பது தண்டனையே என்று அழகாகச் சொல்கிறார் சதீஷ். தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் புனைவைத் தவிர்க்கிறார். ஆனால் சிக்கல்கள் நிரம்பிய புலப்பெயர் வாழ்வை சரியாகவே தனது கதைகளில் சித்தரிக்கின்றார்.
தொடரும்
1 comments:
Well done!Greetings forever!!
Make a comment/and link my blogs!
http://worldtamilrefugeesforum.blogspot.com
Post a Comment