Saturday, December 27, 2008

தவிக்கவிட்டு மறைந்ததேனோ - தமிழா!


டாக்டர் இந்திரகுமார் ஒரு நினைவு வெள்ளம் "ஒரு இதய ஏட்டில் இருந்து கல்லாறு சதீஸ்

"வாழ்வு பற்றியும் மரணம் பற்றியும் புரிதல்"

எப்படியிருந்தாலும் பழகிய உறவொன்று
மறைந்த செய்தி வருகையில், உடலும், உள்ளமும்
எப்படி நொடிக்கப்படுகிறது. ஏன்
என்று மட்டும் இன்னும் புரியவேயில்லை.
நேசம் நெஞ்சுக்குள் ஊடுருவி ஆழப்
பதிந்ததனாலா? அவர்! நினைவுகள் மனதெல்லாம்
மகுடமிட்டுக் கொண்டதனாலா? அவர் ஆளுமை
எமக்குள் தோற்றுவித்த வியப்பினாலா?
டாக்டர் இந்திரகுமார்! உச்சரிக்கும் பொழுதே
இப்பெயர், தமிழும், அறிவும், ஆளுமையும்
அப்படியே எமக்குள் தந்துவிடும் தவமாகவல்லவா
தோன்றுகிறது. அறுபத்திமூன்று வயதுக்குள், டாக்டர்
இந்திரகுமார், இந்தப் பூமிப்பந்தில், தமிழ் என்னும்
மொழிப்பந்தலில் பதித்துச் சென்ற தடயங்கள் எத்தனை எத்தனை?
1999ம் ஆண்டு, முதன் முதலாக டாக்டர்
இந்திரகுமார் அவர்களைச் சந்தித்த போது
எனக்குள் பரவசம் "வாடைக்காற்று" எனும்
இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1978ம் ஆண்டு
வெளியிடப்பட்ட திரைப்படத்தின் கதாநாயகனைச்
சந்திக்கின்றேனே என்று புழகாங்கிதம்
ஒரு திரைப்படக் கதாநாயகன் என்பதனை விட,
அவரின் பல்துறை வித்தகங்கள் என்னை வியப்பிலாழ்த்தியது
ஒரு மனோதத்துவ டாக்டராக, புகழ்மிக்க எழுத்தாளராக, மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக, இனிய ஒலிபரப்பாளராக.....
டாக்டர் இந்திரகுமார், நீங்கள் தமிழுக்கு தந்த
முகங்கள் எத்தனை? ஆளுமையின் சிகரமே இன்று அடங்கிப் போனதெப்படி?
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நீங்களும்,
நானும் அதிகமாக உரையாடிக்கொண்டோம்
அநேகமாக மாலைப்பொழுதுகளில் தொலைபேசியில்
அழைப்பீர்கள். ஒருமணிநேரம் பேசிக்கொண்டோம்
ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தருடன் பேசியது
போன்ற மகிழ்ச்சியிருக்கும். முதலிலெனக்கு
இலக்கியம், தத்துவம், மருத்துவம், தமிழ், தமிழ்த்தேசியம், விண்ணியம் என்று
எத்தனை துறை சார்ந்த எனக்கு போதனை செய்துள்ளீர்கள்?
தமிழின் அரிய பொக்கிசமே! அறிவின் விருட்சமே! இப்போது மீண்டும் ஒலிக்காதா
உங்கள் குரல், இப்போது மீண்டும் எழுதாதா உங்கள் விரல்?
நான் தேடினேன் "எங்கே நீங்கள்" என்று
தேடினேன் ஏழு மாதங்கள் இந்தியாவிலே நீங்கள்
இருந்ததாக அறிந்தேன். மீண்டும் பேசுவேன் உங்களிடமிருந்து
இன்னும் அறிவூட்டப்படுவேன் என்றே எண்ணியிருந்த எனக்குள்
இடியாக இறங்கியது உங்களின் இறப்புச் செய்தி.
"ஸ்கைலாப்" எனும் விண்கலம், கட்டுப்பாடிழந்து,
பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதனை, இலங்கை
வானொலியில் நீங்கள் தான் நேரஞ்சல் செய்தீர்கள்.
'இதோ! விழுகிறது. இந்து சமுத்திரம்
கடலில் விழுந்தே விட்டது' என்று மனித குலம்
மகிழ்ச்சிப்பட்ட செய்தியை ஒலிபரப்பியவரும் நீங்களே!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த
திரைப்படமான "வாடைக்காற்று" திரைப்படத்தின் கதாநாயகனும் நீங்களே!
சுவிஸ் தமிழர் பேரவையின் நமச்சிவாயம்
அவர்கள் கதாநாயகனாக நடித்த "குற்றவிளக்கு"
திரைப்படத்தைப் பார்வையிட்டேன். அதே போல்
நீங்கள் நடித்த 'வாடைக்காற்று' திரைப்படத்தின்
பிரதியுள்ளதா? என்று உங்களைக் கேட்டேன்
நானும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
கனடாவிலுள்ள கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனிடம்
உள்ளதாக அறிகிறேன். கிடைத்தால் அனுப்புவேன்
என்றீர்கள். இனிக் கிடைக்குமா? உங்களை
30 ஆண்டுகளுக்கு முன்னரேனும் மீண்டும் பார்க்க ஆசை
விண்ணிலிருந்து மண்ணுக்கு, நீங்கள் எழுதிய
அற்புத நூல் இலங்கையின் சாகித்திய அகதமி விருதைப் பெற்றதே!
'விண்வெளியில் வீரகாவியம்' தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றதே
'டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?'
'வயகராவும் ஏனைய சிகிச்சை முறைகளும்' என்று எத்தனை விஞ்ஞான தமிழ் நூல்கள்? உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பு மிகு
பதவியிலிருந்து, தமிழருக்கென்ற தனித்துவம் தேடு
உங்களின் இறுதிக்காலம் கடந்தறிந்து மகிழ்ச்சி கொண்டேன்
இன்று பிரிந்த செய்தி கேட்டு துயரம் கொண்டேன்
கலை உலகின் வித்தகியாகிய உங்களின் மனைவி
விஜயாம்பிகை, உங்கள் அன்புமகள், மருமகன்,
உறவினர்கள், உற்றார், இனிய நண்பர்கள் என்று அனைவருக்கும்
'இந்த நேரமும் கடந்துபோகும்" என்று என்
மனராஞ்சலியை நிறைவு செய்கின்றேன்.

1 comments:

கானா பிரபா said...

வணக்கம் நண்பர் சதீசுக்கு

டொக்டர் இந்திரகுமார் குறித்த உங்கள் பதிவு மனதை கனக்க வைத்தது, என் வலைப்பதிவிலும் அவர் குறித்த பதிவை இட்டிருக்கின்றேன். இங்கே www.kanapraba.blogspot.com

எமது அவுஸ்திரேலிய வானொலிக்கு இவர் குறித்த அஞ்சலியை கொடுக்க இருக்கிறேன். உங்கள் தொடர்பிலக்கம் தரமுடியுமா? என் மின்னஞ்சல் kanapraba@gmail.com