Sunday, November 30, 2008

ஆலயம்- பாகம் 8

எனது கல்லறையை முன்னரெல்லாம் அழித்த கயவர்கள் காணாமல் போய்விட்டார்கள்!

நான் முழங்கால்களில் இருந்து கல்லறையைத் தரிசித்தேன்.

எனக்கு முன்னே வெளிச்சம் பிரகாசமாக உண்டாயிற்று! அந்த வெளிச்சத்தினூடே இருவர் பறந்துவருவது தெரிந்தது! என்னை நோக்கியே அவர்கள் வந்தார்கள். ஒருவர் இந்த நாட்டிலுள்ள காடுகளிற்கான ஆண்டவரின் தூதுவர்! மறுவர் ஆண்டவர்!!

அழியழியென அழிப்பினும், உடையுடையென உடைப்பினும்

முழுமுதல் முயற்சியில் முன்னோனே!

மதியிலு முயர்ந்த மனசோனோ!

மனசார வாழ்த்த வந்தோமே - யாம்

கல்லறையுடைத்தோரைக் காண்!

என்று ஆண்டவர் எனைப் பார்த்துரைத்தார்.

"நன்றி தேவனே! நன்றி" யென உருகினேன். "ஆனாலும், ஆண்டவரே! கல்லறையுடைத்தோரைத் தயவுசெய்து, 'மரணம் புனிதமானது' என்று உரைத்து விடுதலை செய்து விடுங்கள்" என்றேன்.

ஆண்டவர் சிரித்தார். "பகைவரை மன்னிக்கும் மனதும் உனக்குண்டோ" என்றார்.

"மரணம் புனிதமானதென என்று நான் நம்பினேனோ, அன்று முதல் எனது மனது புனிதமானது. எவரையும் என்னால் தண்டிக்க முடிவதில்லை. மாறாக, அனைத்தையும் நேசிக்கவே துடிக்கிறேன். நேசிக்கையில் பற்றுக்கள் அற்றுப் போனவனாகவும், என்னை நானே மறக்கையிலும், எல்லாவற்றையும் நேசிப்பவனாகவும் மாறிப் போகிறேன். மரணம் வெல்ல முடியாத சம்பவமாக இருப்பதனால்தான், இந்த உலகம் இப்படியேனும் அமைதியாய்க் கிடக்கிறது. எல்லா அனைத்து மனிதர்களும் மரணத்தை நேசிக்க வேண்டும். தூங்கப் போகும் முன்னர், 'நான் இந்த உலகில் நித்தியமான உயிர்வாழும் ஜீவன் இல்லை' என்பதனை தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும்.

இப்படி மரணத்தை நேசித்தவர்கள்தானே, இன்று எங்களின் வணக்கத்திற்குரிய மாவீரர்களாக மாறிப் போனவர்கள்!

எந்தக் கணத்தில் எனக்கு மரணம் என்பதனை முன்கூட்டியே தெரிந்துகொண்டு மலர்ந்து சிரித்த முகத்துடன் செல்கின்ற அந்த மாமனிதர்களின் தியாகமும், அவர்களின் தியானமும் இந்த உலகிலே உள்ள அனைத்துச் சிறந்தவைகளுக்கும் தலையானது என்பேன்.

அவர்களைவிடத் தன்நலமற்ற, மனித சமூகத்தின் நன் நோக்கைக் கருத்தில் கொண்டவர்கள் யாருமுளரோ? ஏனைய உலகில்?"

ஆண்டவர் சிரித்தார்...."நீ கூறுவது ஒரு பக்கத்தில் மட்டும்தான் சரியானது. தங்கள் உயிரைத் தியாகம் செய்து, நீதிக்காக மட்டுமே செய்பவர்களே அந்தத் தியாக தீபங்கள்! மாறாக, மக்கள் உயிரைப் பறிப்பவர்கள் அல்லர்" என்றார்.

"எனக்குப் புரிகிறது. செப்ரெம்பர் பதினொன்று அந்த ரகம் இல்லைதான்."

உனது கருத்துக்களும் கணிப்புக்களும் சரியானவை, உனது மரணத்தைப் போல, நீ கட்டிய இந்தக் கல்லறையும் புனிதமானது.

விழித்துப் பார்த்தேன். அங்கே ஆண்டவரும் இல்லை! அவரின் தூதுவரும் இல்லை!! கல்லறையுமில்லை! கல்லறை கட்டிய காடும் இல்லை! அங்கே நின்றிருந்த நானுமில்லை!

அப்படியானால் ஏனிப்படி ஒரு நீண்ட கனவு வந்தது?!

"அந்தக் கனவைப் போலதான் வாழ்க்கையும் மாயை"

யாரது...? யாரின் குரலிது....?!

மரணம் புனிதமானதென்று எனக்குப் புரிவதற்கு முன்னர் என்னை நேசித்து, மனமுடைந்து, பின்னொருநாளில் மரணித்துப் போன உனது குரலல்லவா இது?!



முற்றும்

Friday, November 28, 2008

ஆலயம் - பாகம் 7

புதிதாக, புதிய இடத்தில் எனக்குப் பிடித்தமான கல்லறையை ஒரே இரவில் அழகாகக் கட்டி முடித்தேன். கல்லறைக்கு அபூர்வமான வர்ணங்களைத் தீட்டினேன். அதன் ஜொலிக்கும் அழகில் எனக்குத் திருப்தி உண்டானது போல் தோன்றியது.

"எனது கல்லறையைக் கூட அழிக்க முயன்றவர்களே!

என்னையும் கூட நீங்கள் அழிக்கலாம்.

என்னைப்போல் நீங்களும் அழிந்து போவீர்கள் - ஆனால்

எனது வாழ்வின் வடுக்கள் இந்தப் பூமியில்

என்றும் சிரித்துக் கொண்டே கிடக்கும்."


மேற்படி வசனத்தைக் கல்லறை முகப்பில் எழுதினேன். ஒரு மெழுகுத்திரியை ஏற்றினேன். தேங்காய் எண்ணெய் விட்டுத் திரிவிளக்கொன்றையும் பற்ற வைத்தேன். புதுவகையாக மேலுமொரு விளக்கை ஏற்றினேன்.


இந்த உலகிலே தோன்றி மறைந்து போன அனைவருக்கும் எனது அஞ்சலியென்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

எனது அஞ்சலியோ, எனது வார்த்தைகளோ எவருக்குமே கேட்டிருக்க மாட்டாது. மறைந்துபோன எந்தவொரு மனிதனின் ஆன்மாவிற்கும் கேட்டிருக்குமென எனக்கு எண்ணத் தோன்றவில்லை.

மரணத்தின் பின் மனிதவுடல் எரிக்கப்படுகிறது. புதைக்கப்படுகிறது. சிலவேளைகளில் மீன்களால், பறவைகளால் எண்ணப்படுகிறது. ஆனால், அவனை இயக்கிக் கொண்டிருந்த உயிர் எங்கே போயிற்று? அதுதான் ஆன்மாவாக நிரம்பி இந்தப் பூமியில் வீசும் தென்றலா?!

ஆன்மா இருக்கிறதா? உயிர் மீண்டும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறதா? இறப்பின் பின்னர் அவற்றிற்கு, எமது நினைவுகள் தெரிகின்றதா? இதைப் பற்றிக் கல்லறைக்கு முன்னே நின்று பலமுறை சிந்தித்தேன்.

கொட்டாவி வந்தது! தூக்கத்திற்கு குறியீடா? எனது உடம்பில் உற்பத்தியான அந்த ஆவி, எனது வாய்வழியே சூடாக வெளியேறுவதை உணர்கிறேன்.

உயிராவி வெளியேறியதும், உடம்பு மரணம் கொள்கிறதா? கொட்டாவியும், உயிராவியும், ஒன்றைவிட ஒன்று பெரிதா? சிறிதா? அவற்றை அளக்க முடியுமா?

இந்த நினைவுகள் எனக்குள் ஏதோ தெளிவுகளை விதைக்கின்றன. நான் வீடு நோக்கிச் சென்றேன்.

நான் நினைத்தது போல் கல்லறையைக் கட்டி முடித்து விட்டேன். இருந்தாலும், இன்று இரவு போய் அந்தக் கல்லறையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமெனச் சென்றேன்.

இன்றும் கூட எனது கல்லறையை எவரேனும் பிடுங்கிச் சென்றிருக்கலாம் எனும் சந்தேகம் வலுக்கவும் வேகமாகச் சென்றேன்.

இல்லை - இல்லவேயில்லை... எனது கல்லறையில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அது அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது கல்லறை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.




தொடரும்

Wednesday, November 26, 2008

ஆலயம் - பாகம் 6

இந்தக் கல்லறையை, நீ கட்டியதாகக் கூறுகின்றாயே! இது நீ கட்டியது அல்ல, இதனைக் கட்டியவர் இறந்து போய்விட்டார்.

இந்தக் கல்லறையை எவருக்காக, எவரின் நினைவுக்காக நீ கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ! அந்த மனிதனைக் கொலை செய்தது நீதான்"

"ஐயோ, இது என்ன அபாண்டமானகுற்றச்சாட்டு, இது எவ்வளவு மோசமான பொய். ஏய்.. உனக்கு மனச்சாட்சியே இல்லையா? ஏன், நீ எனது வாழ்க்கையை இப்படிக் கருவறுக்கிறாய். ஆனாலும் உனது பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்னை எதுவும் பண்ணாது. எனது ஆண்டவர் இதனைப் பொய் என்று நம்புவார்."

"டேய் நான் பொய்யாகத்தான் இக்கதைகளை உன்மேல் கட்டவிழ்த்து விடப் போகிறேன். ஏனென்றால், இனி நீ இந்தக் காட்டுக்கு வந்து கல்லறை கட்டுவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காக"

"ஏன் இந்த வஞ்சகத் தனத்தைச் செய்கிறாய்?"

"ஆண்டவனிடத்தில், என்னைத் திறமையாளனாக நிரூபிப்பதற்கு இவையெல்லாம் எனக்கு பயன்படும்"

"இறுதியில் நீ ஒரு துரோகியென அறிந்து கொள்ளப்பட்டுத் தண்டிக்கப்படுவாய்"

"இங்கே பார்! உனக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று உனக்கும், எனக்கும்தான் தெரியும். இதனை உண்மையென, உனக்கும், எனக்கும் பொதுவான ஆண்டவனுக்கு இன்றே நான் கூறுவேன், அதுமட்டுமல்ல, இதனை இந்தக் காட்டிலிருக்கும் மரங்களுக்கும் கூடக் கூறுவேன், பொய்களினாலே உண்மையான உன்னைச் சாகடித்து, பொய்யான நான் உயிர்வாழ்வேன்."

"இந்தக் காட்டில், இப்படிப்பட்ட உன்னைப் போன்ற துரோகிகளும் இருப்பதனால், வாழ்வைவிட மரணம் புனிதமானது!"

பொழுது இருளகற்றி ஒளிபெறத் தொடங்கியது. எனது க்கல்லறை கரைந்து காணாமல் போனதுடன் எனது வ்ஈட்டுக்கு நான் சென்று விட்டேன்.

எத்தனை முறை முயன்றேன், எனது விருப்பப்படி நேர்மையாக ஒரு கல்லறை கட்டக் கூடவா முடியாமலிருக்கிறது? முகத்துக்கு நேரே, உன்னைத் துரோகியாக்குவேன் என்று மனமறிந்து பொய் சொல்லும் இவனுடன் மோதுவதைவிடப் பேசாமல் தூங்கிப் போய் விடலாம்.

எனது உள்மனம் எனக்கு உதவி செய்ய முன்வருகிறது.

'நீ தொடங்கி விட்டாய், உன்னால் இதுவரை முழுமையான கல்லறை கட்ட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீ கட்டத் தெரியாதவன் என்று அதற்கு அர்த்தம் இல்லை எழும்பு, ஓடு.... கல்லறை கட்டிய உன் கைகளின் லாவகத்தை இன்னும் நேர்த்தியாக்கு மிக விரைவாக, மிக அழகாக அந்தக் கள்ளறையைக் கட்டு, கட்டி முடி!'

எங்கேயிருந்து வந்தது, எனக்கு இந்தப் பலம்.... எதிர்க்க எதிர்க்க நேர்மையானவன் மேலும் வலிமை பெறுவான். அது அவனது ஆன்மாவின் பலமாக இருக்கும். இந்தப் பலத்துடன் எந்தப் பலமும் இலகுவில் வெற்றி பெற முடியாது.

காட்டுக்குள் எப்படித்தான் என்றேனோ, எனக்குத் தெரியாது.





தொடரும்

Monday, November 24, 2008

ஆலயம்- பாகம் 5

அந்த ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குக் கல்லறை மறந்து போயிற்று.

என்னை அது பரவசத்தில் ஆழ்த்திற்று. நான் புத்துணர்ச்சி பெற்றேன். பக்தியோடு ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தேன். இந்த ஆலயத்திற்காக எனது கல்லறை அழிக்கப்பட்டிருந்தால், அது எனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று எண்ணினேன்.

"தெய்வமே! ஆண்டவரே! இறைவனே! என் தேவனே!' என்று நான் உருகி உருகி வணங்கினேன்.

" உனது ஆலயத்திற்காக எனது கல்லறையை நீ எடுத்துக் கொண்டதற்காக நன்றி என் தேவனே" எனும் குரல் கேட்டு, யாரோ ஒருவர் அவ்விடம் வந்தார்!

ஒரு தேவலோக மனிதனைப் போல தோன்றினார்! நான், கடவுளுக்கு கொடுத்த அதே மரியாதையுடன் அவரை எழுந்து நின்று வணங்கினேன்.

"உனக்கு என்ன வேண்டும்? ஏன் இங்கே வந்தாய் என்றார். நான் நடந்ததைக் கூறினேன். ஆனாலும் எனக்கு மகிழ்ச்சியென்றேன்.

நேரம் போகப் போக அந்தத் தேவலோக மனிதனின் உருவம் மாறத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு விகாரமான உருவம் என்னைப் பார்த்துக் கத்தத் தொடங்கியது...!

"யாரடா உன்னை இங்கே வரச் சொன்னது? ஏனடா நீ கல்லறை கட்டுகிறாய்? யாரிடம் கேட்டடா இங்கே கல்லறை செய்தாய்? அழிக்க அழிக்க நீ என்னடா, திரும்பத் திரும்பக் கட்டிக் கொண்டிருக்கிறாய்?" என்று என்னை அந்த உருவம் மாறி மாறிக் கேள்வி கேட்டது.

எனக்குப் பயம் வரவில்லை. ஏனென்றால், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்குக் காட்டிலே கல்லறை கட்ட எல்லாவித உரிமைகளும் இருப்பதாக நம்பினேன்.

"ஏ... நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை, இந்த ஆலயம் எனது விருப்பத்தெய்வத்தின் வடிவத்திலிருந்ததனால் உனக்கு மரியாதை செய்தேன், இனி உனக்கு நான் மரியாதை செய்யப்போவதில்லை, ஏன் எனது கல்லறையை அழித்தாய்?"

"அதுவா! எனக்கு எதுவுமே செய்யாமல் இருக்க முடியவில்லை. அதனால் யாருடனாவது பிரச்சினை செய்ய வேண்டும் போலுள்ளது என்றும் நீ நினைத்துக் கொள்ளலாம். மேலும், நானே ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்ற இந்தக் காட்டில் நீ வந்து கல்லறை கட்டுகிறாய், இந்தக் கல்லறையை நீ அழகாகக் கட்டி முடித்துவிட்டால் அதன்பிறகு ஆலயம் கட்டவும் நீ முயல்வாய், எனவே, உனது கல்லறைக் கனவை கலைக்க முயன்றேன்."

"இது அநியாயம், இது மிக மிக மோசமானது, என்னை, எனது கல்லறையைக் கட்டவிடு, அல்லது நான், உன்னைப் பற்றி, எனது ஆண்டவனிடம் முறையிடுவேன்"

"நீ முறையிட்டால் தண்டிக்கப்படப் போவது நீயாகத்தான் இருப்பாய்"

"அது எப்படி? நீ தவறு செய்ய, தண்டனை எனக்கா?"

"இதைக் கேள் முட்டாளே?"

"என்ன நீ, மரியாதையில்லாமல் கதைக்கின்றாய்?"

"உன்னோடு நான் கதைப்பதே, நீ செய்த புண்ணியம்தான்"

"சீ... போ... சாத்தானே! உன்னைப் பற்றிச் சொல்லி, உனது அகந்தையை அடக்குகிறேன்."

"நீ என்னைப் பற்றி முறையிடுமுன், உன்னைப் பற்றி நான் குற்றம் சாட்டவுள்ளேன்."

"அப்படி என்ன குற்றத்தைக் கண்டாய் என்மீது?"

"அப்படிக் கேள் கூறுகிறேன்.



தொடரும்

Sunday, November 23, 2008

ஆலயம் - பாகம் 4

எனது கல்லறை காணக் காதலோடு ஓடி வருகிறேன். என்னே எனது ஆச்சரியம்! கல்லறையின் மேலே ஒரு மரம் முளைத்துக் கல்லறையைத் தகர்த்து, முன்னர் நின்றிருந்த விருட்சத்தையும் கிழைத்து, 'நான் மரங்களுக்கே அரசன்' என்பது போல் நின்றது.!

"ஏ.. யாரது.... ஏன் எனது கல்லறைமேல் கல்லடித்தாய்? இந்த மனிதப் புழு... தனது மூச்சை விடுவதற்காக, தனது வாழ்வைக் கழிப்பதற்காக, தனது உழைப்பைச் செய்வதற்காக, இந்த உலகைப் புரிவதற்காகக் கட்டிய கல்லறையை, சிதைக்கலாமா? இதைக் கட்ட நான் எத்தனை கஸ்டப்பட்டேன். எத்தனை இரவுகளைக் கொலையிலிட்டேன். எத்தனை கனவுகளைச் சிதையிலிட்டேன். நெஞ்சமே வெடிக்கப் பார்க்கிறது! வெடித்து விடமாட்டாயா நெஞ்சமே! நிஜ நிம்மதி உடன் எனக்காகுமே!

கா...கா...கா.. வந்து விட்டாயா? நீ வருவாய் என நான் நினைத்தேன்...."

அந்தப் பெரிய மரத்தின் கப்பிலிருந்து ஒரு உருவம் என்னை நோக்கிக் கேட்டது!

"வந்துதான் விட்டேன். நீ யார்? ஏன் எனது கல்லறை மேல் மரம் வளர்ந்துள்ளது?" ஏதோவொரு துணிவுடன் நான் கேட்டேன்.

"நீ கல்லறை கட்டுவதை ஒவ்வொரு இரவும் நான் கவனித்துக் கொண்டுதான் வந்தேன். நீ கல்லறை கட்டுவது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால்,கல்லறை கட்டும் தகுதி உனக்கு உள்ளதா?"

"கல்லறை கட்ட என்ன தகுதி வேண்டும்? எனக்குக் கட்ட வேண்டும் போல் இருக்கிறது, கட்டுகிறேன்"

"நீ நினைத்தபடி இங்கே எல்லோரும் எல்லாமே செய்ய முடியாது. அதற்கதற்கென சில கற்கை நெறிகள் உண்டு, அதைக் கற்று விட்டு வந்து கல்லறை கட்டு."

"அது என்னால் முடியாது. நான் கட்டுவேனெனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால் கல்லறை கட்டி முடிக்காமல் நான் போக மாட்டேன்."

"படிக்காமல் கல்லறை கட்டாதே!"

சாதாரணமாகக் கற்றுக்கொண்டு செய்வது முழுமை பெறலாம், அசாதரணமாகக் கற்றுக் கொள்ளாமல், ஒரு தேவையின் அடிப்படையில், செய்வது புதுமையாகும்.

முழுமையிலும், பார்க்கப் புதுமை எனக்குப் பிடிக்கும். எனது புதுமை பார்த்து, எவரும் முழுமை செய்து சுகம் பெறட்டும். எனக்கு புதுமையே பிடித்திருக்கு. அது குறையாகக் கிடந்தாலும், எனவே, எனது கல்லறையைக் கட்ட விடு.

"இல்லை, கற்றுக் கொள்ளாத நீ கட்ட முடியாது"

"என்ன, கொடுமை இது! எனக்கு தூக்கம் வரவில்லை, அல்லது நான் தூங்க விரும்பவில்லை. ஒரு கல்லறை படைக்க எந்த பனித சஞ்சாரமுமற்ற காட்டிற்கு வந்தால், இங்கேயும் வந்து என்னை அதிகாரம் செலுத்த நீ யார்? எனக்கு, என்னை எவரும் அதிகாரம் செய்வது பிடிக்காது. நானும் எவரையும் அதிகாரம் செய்வதில்லை, தயவுசெய்து எனது கல்லறையைக் கட்ட விடு."

"முடியாது போ!"

"எனக்கு அதிகாரம் செய்யப் பிடிக்காது, அதனால், உனது அநியாயமான கட்டளையை எதிர்க்கக்கூடப் பிடிக்கவில்லை. இன்னும் இங்கே இருந்து கதைத்தல், எனது படைப்பைப் பாதிக்கும். நான் செல்கிறேன்"

நடந்து கொன்டிருந்தேன். அது மிக மிக நீண்ட நடைடூரம். எனக்கு அந்ர்க இடம் பிடித்திருந்தது. இதுதான் எனது கல்லறைக்கான சரியான இடமெனத் தீர்மானித்தேன்.

வெகு விரைவாகக் கட்டி நிலமட்டத்திற்கு மேலே ஒரு மீற்றர் உயரம் வரை வந்துவிட்டேன். புலர் பொழுதானது. சூரியனுக்கு மரியாதை செய்து சென்று விட்டேன்.

அடுத்த இரவு அற்புதமான இரவாகுமென நினைத்து, எனது கல்லறை தேடி வந்தேன்.

எனது கல்லறையை வழமை போலவே காணவில்லை, ஆனால் மிக மிக அழகாக, நேர்த்தியாகக் கட்டப்பட்ட ஆலயமொன்று அங்கே இருந்தது.


தொடரும்

Saturday, November 22, 2008

ஆலயம்- பாகம் 3

கட்டுவதும், அழிப்பதும், அழிக்கப்படுவதும், கட்டுவதும்தான் நியதியா? அழியாமல் வேண்டுமே? எல்லாமே அழியாமல் வேண்டுமே! எல்லாமே அழியும் உலகில் ஆசை மட்டும் அழியாமல் இருக்கலாமா?!

ஐந்தாவது நள்ளிரவு, எனது கல்லறையைக் கட்டி முடிக்கப் போகிறேன்.

எங்கே என் கல்லறை? கல்லறையைப் பிடுங்கிவிட்டு, யார் இந்தப் பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டியது?! இது வெறும் கட்டிடமா? இல்லையே! இது ஏதோவொன்றைப் போல் உள்ளதே!

பன்சலை போலும், மகுதி போலும், ஆலயம் போலும், கோயில் போலும் தோன்றுகிறதே! என்ன இது?! ஆண்டவன் சந்நிதியா? நான் காட்டில்தானே கல்லறை கட்ட வந்தேன்! யார் இந்தப் பிரமாண்டம் செய்தது?

கட்டிடத்திற்குள் நுழைகிறேன்! 'புத்த பகவானே! அல்லாவே! இயேசுவே! சிவபெருமானே! விஷ்ணுவே!' - மீண்டும் மீண்டும் கூப்பிடுகிறேன். எனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளர் பெயர்களையும் கூப்பிடுகிறேன். எந்தப் பதிலுமில்லை! இறுதியாக, 'புதிய தெய்வங்களின் ஆலயமோ?' என்று நினைத்து 'குஷ்பாம்பிகையே! பெப்சி உமாதாயே!' என்றும் அழைத்துப் பார்த்தேன். எவருமே எதிர்க்குரல் காட்டவில்லை!

கடவுளர் தோன்றாத, அந்த மர்மக் கட்டிடத்தை உடைத்தேன்! சிறு கல்லறையைக் கட்டுவதற்கு இருந்த கஷ்டம்கூட, இப்பெரிய கட்டிடத்தை உடைப்பதற்கு இருக்கவில்லை! எதிலுமே உருவாக்கமே கடினமானது, அழித்தல் இலகுவானது!

மீண்டும் எனது கல்லறையை முதலிலிருந்து கட்டத் தொடங்கினேன்! நேற்றிரவில் கட்டியதை விட, சற்று அதிகமாகவே கட்டி முடித்துவிட்டேன்.

இன்று அழித்தலும் செய்து, ஆக்கலும் செய்ததனாலோ என்னவோ, வழமைக்கு மாறாகத் தூக்கம் கண்களை இழுத்துக்கொண்டு வந்தது.

எனக்குத் தூக்கம் பிடிப்பதில்லை. ஆனாலும் தூங்காமல் இருக்கவும் முடிவதில்லை. எனக்கும் ஒருநாள் நிரந்தரத் தூக்கம் வருமே... அப்பொழுது இந்தத் தூக்கத்தையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் செய்து கொள்ளலாமென நினைப்பேன்! எனது உடலும், கண்களும், எனது உளத்துடன் தூக்க யுத்தம் செய்யும்; வெட்டி வெட்டி எறிந்து தூக்கத்தை விரட்டுவேன். இப்பொழுதெல்லாம் அதிகமாக ஒரு மணி நேரம் தூக்கம் கொண்டாலே பெரும் துயராக மாறி விடுகிறது.

தூக்கத்தைத் துரத்தப் புத்தகம் படிக்கிறேன்! எனக்கு நிறையப் புத்தகங்கள் தேவையாகவிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு சுவிஸ் பிராங்குகளுக்கு புத்தகம் வாங்குகிறேன், வாசிக்கிறேன். வாசிக்கும்பொழுது நான் புதிது புதிதாகப் பிறப்பதாக நினைக்கிறேன்! புத்தகம் இல்லாத இரவுகளில் நடக்கிறேன். அப்படி நடந்துதான் அந்தக் காட்டைக் கண்டுபிடித்தேன். அதனால், இன்று அதிக தூக்கம் வருகிறது. என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை.

எனது மெத்தையில் ஓடிப்போய் விழுந்தேன். சுகமான குளிராக இருந்தது. கோழி இறகுப் போர்வைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டேன். இப்பொழுது இந்த உலகை எனக்குத் தெரியாமல் போனது. எனக்குக் கனவு வரவில்லை. எனது குறட்டைச் சத்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் புரண்டு உறங்கியது எனக்குப் புரியவேயில்லை. நான் எனது நாளாந்த நிகழ்வுகளையே புரியாத ஒரு பாமரன். எனக்கு என்ன தெரியும்... நான் எதற்கேனும் இறுமாந்து நிற்பதற்கு? விழித்துக் கொண்டேன். எட்டு மணிநேரம் உறங்கிக் கிடந்தது தெரிந்தது.




தொடரும்

Friday, November 21, 2008

ஆலயம் - பாகம் 2

மனிதர்களின் எந்த முகங்களும் தோற்றம் கொள்ளாத தொலைந்த காட்டிற்குள் வந்து நிற்கிறேன்! நள்ளிரவு பன்னிரெண்டு மணி மரணித்துக் கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமான மரம் வீடு போல் நிற்கிறது!

கல்லறை கட்டத் தொடங்கலாமா எனச் சிந்திக்கிறேன். முடிவு எடுத்து விட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்கிறேன்.

இரண்டாம் நள்ளிரவு அங்கே வருகிறேன். நான் சுத்தம் செய்து வைத்த இடம் மேலும் அசுத்தம் பண்ணப்பட்டுக் கிடக்கிறது. நினைவுக்கும் நலம் அடிக்கப்பட்டது பார்த்துச் சிரிப்பு வருகிறது! முதல்நாள் இரவு செய்தது போலவே இன்றும் துப்புரவு செய்கிறேன்.

காட்டில் உள்ள விருட்சமொன்றின் கீழே எவருமில்லாத வனாந்தரத்திலே நான் கல்லறை செய்ய மடுத் தோண்டினேன்.

மடுத் தோண்டுவது இலகுவாக இருக்கவில்லை. மண்ணில் தோண்டுவதற்குப் பதிலாக மலையில் தோண்டுவதைப் போல் மிகமிகக் கடினமாக இருந்தது. மண்வெட்டி கூட கூர் மழுங்கிப் போயிற்று. கல்லறைக்கு மடு தயாரெனும் நிலையில், பொழுது காலையை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவுதான் கல்லறை கட்ட மிகவும் சரியான நேரமென எந்தக் காரணமுமின்றி நினைவு தோன்றிற்று.

மூன்றாவது நள்ளிரவு - விரைவாக இந்தக் கல்லறையைக் கட்டி முடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு ஓடிவருகிறேன்.

கல்லறைக்கான மடுவை மூடியுள்ளது. கூடத் தெரியாமல், அந்த இடத்தில் கடந்த இரவு மடு வெட்டிய எந்த அடையாளமும் இல்லாமல், எனது மடு, இல்லாத என்னைப் போலவே, இல்லாது போயிருந்தது! மீண்டும் மடுவைத் தோண்டினேன். நேற்று இரவு மடுவெட்டிய பரிச்சயம் இன்று விரைவாக வெட்ட உதவிற்று. கல்லறைக்கான கற்களை அடுக்கி, சீமெந்து(சீமெண்ட்) குழைத்துக் கலவையிட்டு, அத்திவாரத்தை நிலமட்டம் வரை போட்டுவிட்டேன்.

காட்டில் இனம்புரியாத நிசப்தம் தோன்றிற்று. பறவை இனங்களின் ஒலிகள் மாயமாகின? மரங்கள்கூட அசைவதை நிறுத்திவிட்டன. 'கல்லறையின் பிறப்பிற்கு இயற்கையின் மெளன அஞ்சலியோ இது?' என நினைத்தேன்.

கடந்த மாதம் வெட்டியதுபோதுமென நிறுத்தித் தலை சுமந்து நின்ற முடியை நேற்றுச் சென்று வெட்டி வந்தேன்.

வயிராறச் சாப்பிட்டு நேற்றுக் குளித்த நான், இன்று மீண்டும் குளிக்கையில் ஊத்தைகள்!.

அப்படியெனில், நேற்றைய 'சரி'கள், இன்றைய 'பிழை'களா? நேற்றைய 'போதும்'கள் இன்றைய 'போதாமை'யா? நேற்றைய நிறைவுகள் இன்றைய நிறைவீனமா?

பிழைகளும், போதாமையும் நிறைவீனமும் சரியானவையா?! சரிகளும், போதும்களும், நிறைவுகளும் பிழையானவையா?!

நான்காவது நள்ளிரவு...., நடுக்காட்டில் கல்லறையைக் கட்டி முடிக்கப் போகிறேன்.

நான் கட்டுகின்ற இந்தக் கல்லறைக்கு மிகப்பெரிய அர்த்தமுண்டு. இது சாதாரண கல்லறையல்ல; எனது தூக்கத்தை விற்று விற்று இதைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்! இந்தக் கல்லறை யாருக்கென்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் ஒரு புனிதருக்குத்தான்.

எங்கே எனது கல்லறையின் அத்திவாரம், எங்கே எனது மூன்று இரவுகளின் உழைப்பு? இன்று முடிப்பதற்கு வந்தேன், இன்னும் ஆரம்பமே இல்லாமல் இருக்கிறதே!

மீண்டும் நிலத்தைத் துப்புரவு செய்கிறேன். மீண்டும் அத்திவாரத்தை இடுகிறேன். இன்றைய இரவு பதினைந்து சென்ரி மீற்றர், நிலமட்டத்திலிருந்து மேலே கல்லறை கட்டி விட்டேன். இன்னும் இருமடங்கு உயரம் கட்ட வேண்டும்.



தொடரும்

Thursday, November 20, 2008

ஆலயம் - பாகம் 1

வாழ்வை விட மரணம் உன்னதமானது! வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட மரணித்துப் போனவர்கள் புனிதமானவர்கள்! ஆலயங்களை விடக் கல்லறைகள் நேசிப்புக்குரியன!

அதிகம் நேசிப்பதனாலா, அடிக்கடி கல்லறைகள் செய்கின்றோம்?!

விழித்துக்கொண்டு கனவு காண்கின்றேன்; கண்மூடிக் கனவைத் தொலைக்கின்றேன்! பஞ்சணையில் படுத்துக் கிடந்தே முள் மூடி சுமக்கின்றேன்!

கண்மூடித் தொலைத்த கனவையும், மொட்டைத்தலையாய்க் கனக்கும் முட்களையும் சுமந்து கொண்டு எங்கேயோ போகிறேன்.

நடு இரவில் எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்! பசிக்கும் பொழுதுகளில் கல்லை உண்கின்றேன். தாகமாய் இருக்கையில் இரத்தம் குடிக்க்றேன்! கல்லை மரத்திலிருந்து பறிக்கிறேன். இரத்ததை மலையைக் குற்றி எடுக்கிறேன். மரத்திலேறுவதற்குப் பாதாளக் குகைக்குச் செல்கிறேன்; மலையைக் குற்றுவதற்கு பஞ்சைப் பயன்படுத்துகிறேன்!

திசை தெரியாத தெருவில் நடந்து போய், இருப்பதாகச் சொல்லும் எல்லாமே இல்லையென்றும், இல்லையென்று சொல்லும் எல்லாமே இருப்பதாகவும் எனது மனக் கோட்டைக்குள் உரத்துச் சொல்லுகிறேன்.

நான் என்னும் என்னை, யார் என்று நானே கேட்டுக் கோபம் கொள்கின்றேன்.

நான் என்னும் என்னை, யார் நானே கேட்டுக் கோபம் கொள்கிறேன். கோபத்தில் சிரிக்கிறேன். சிரிக்கையில் சோகக் கண்ணீர் வருகிறது. கண்ணீர் எனது கன்னங்களில் வழியாமல் பள்ளத்தாக்கிலிருந்து மேலோங்கிச் சீறியடிக்கிறது. பின்பு பூமியிலிருந்து மழையாக வானத்திற்குத் தூவுகிறது. தூவானமே வான மண்டலத்தில் பெரு வெள்ளத்தைக் கொடுக்கிறது. வெள்ளத்தில் நான் நடந்து போகிறேன். நடக்கையில் எனது பாதம் நீரில் மட்டுமே படுகிறது!

நீரின் மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையில் மிகச் சிறந்த நாடகம் நடைபெறுகிறது. இருக்கைகளெல்லாம் காலியாகக் கிடைக்கின்றன. இன்னொரு அரங்கம் நிறைந்து வைகிறது. மேடை மூடியே கிடக்கிறது. கரவொலி காதைத் துளைக்கிறது.

சிறந்த ஓவியக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறுகிறது. நிர்வாணப் புகைப்ப்டங்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. சூரியன் உதிக்கும் பொழுது இருள் தோன்றுகிறது. இப்பொழுது எனது பிரிய நேசம் நினைவுக்கு வருகிறது.

எனது தாயிடம் பால் குடித்த நான் எங்கே? எனது தந்தை தன் தோளில் சுமந்த நான் எங்கே? அ..ஆ... பயின்றபோது இருந்த நான் எங்கே? பத்தாம் வகுப்புப் படிக்கையில் எட்டாம் வகுப்பு மாணவியைக் காதலித்த நான் எங்கே? நான் மட்டுமே நேசித்தவளுக்காகக் கண்ணீர் வடித்த நான் எங்கே? என்னை நேசித்தவளை, நானே வெறுத்தா நான் எங்கே? நகங்கள் பிடுங்கப்பட்டு விரல்கள் முறிக்கப்பட்டு, உணவு மறுக்கப்பட்டு உடைந்து கிடந்த நான் எங்கே?

இன்று கிடைந்து உழன்று கிடக்கும் நானா அந்த 'நான்'கள்?! என்னை உரித்துப் பார்த்தால் அந்த 'நான்'கள் கிடைப்பார்களா? அவர்கள் எனக்குள்ளே உள்ளனரா? அல்லது அழிந்து போயினரா? நான்கள் என்பது நினைவிலி மனதின் தோற்றங்களா? மனம் என்பது வெறும் மாயைதானா? இல்லையேல், இதயத்திலோ, மூளையிலோ அது வாகிறதா? இருப்பதும், இல்லாததும் சுத்தமாக இல்லைதானா?! இன்றிருக்கும் நான் இன்றே அழிந்து கொண்டிருக்க, நாளைய நான், நாளை மறுதினம் மரணிக்கிறேனா?!


தொடரும்