Friday, November 28, 2008

ஆலயம் - பாகம் 7

புதிதாக, புதிய இடத்தில் எனக்குப் பிடித்தமான கல்லறையை ஒரே இரவில் அழகாகக் கட்டி முடித்தேன். கல்லறைக்கு அபூர்வமான வர்ணங்களைத் தீட்டினேன். அதன் ஜொலிக்கும் அழகில் எனக்குத் திருப்தி உண்டானது போல் தோன்றியது.

"எனது கல்லறையைக் கூட அழிக்க முயன்றவர்களே!

என்னையும் கூட நீங்கள் அழிக்கலாம்.

என்னைப்போல் நீங்களும் அழிந்து போவீர்கள் - ஆனால்

எனது வாழ்வின் வடுக்கள் இந்தப் பூமியில்

என்றும் சிரித்துக் கொண்டே கிடக்கும்."


மேற்படி வசனத்தைக் கல்லறை முகப்பில் எழுதினேன். ஒரு மெழுகுத்திரியை ஏற்றினேன். தேங்காய் எண்ணெய் விட்டுத் திரிவிளக்கொன்றையும் பற்ற வைத்தேன். புதுவகையாக மேலுமொரு விளக்கை ஏற்றினேன்.


இந்த உலகிலே தோன்றி மறைந்து போன அனைவருக்கும் எனது அஞ்சலியென்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

எனது அஞ்சலியோ, எனது வார்த்தைகளோ எவருக்குமே கேட்டிருக்க மாட்டாது. மறைந்துபோன எந்தவொரு மனிதனின் ஆன்மாவிற்கும் கேட்டிருக்குமென எனக்கு எண்ணத் தோன்றவில்லை.

மரணத்தின் பின் மனிதவுடல் எரிக்கப்படுகிறது. புதைக்கப்படுகிறது. சிலவேளைகளில் மீன்களால், பறவைகளால் எண்ணப்படுகிறது. ஆனால், அவனை இயக்கிக் கொண்டிருந்த உயிர் எங்கே போயிற்று? அதுதான் ஆன்மாவாக நிரம்பி இந்தப் பூமியில் வீசும் தென்றலா?!

ஆன்மா இருக்கிறதா? உயிர் மீண்டும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறதா? இறப்பின் பின்னர் அவற்றிற்கு, எமது நினைவுகள் தெரிகின்றதா? இதைப் பற்றிக் கல்லறைக்கு முன்னே நின்று பலமுறை சிந்தித்தேன்.

கொட்டாவி வந்தது! தூக்கத்திற்கு குறியீடா? எனது உடம்பில் உற்பத்தியான அந்த ஆவி, எனது வாய்வழியே சூடாக வெளியேறுவதை உணர்கிறேன்.

உயிராவி வெளியேறியதும், உடம்பு மரணம் கொள்கிறதா? கொட்டாவியும், உயிராவியும், ஒன்றைவிட ஒன்று பெரிதா? சிறிதா? அவற்றை அளக்க முடியுமா?

இந்த நினைவுகள் எனக்குள் ஏதோ தெளிவுகளை விதைக்கின்றன. நான் வீடு நோக்கிச் சென்றேன்.

நான் நினைத்தது போல் கல்லறையைக் கட்டி முடித்து விட்டேன். இருந்தாலும், இன்று இரவு போய் அந்தக் கல்லறையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமெனச் சென்றேன்.

இன்றும் கூட எனது கல்லறையை எவரேனும் பிடுங்கிச் சென்றிருக்கலாம் எனும் சந்தேகம் வலுக்கவும் வேகமாகச் சென்றேன்.

இல்லை - இல்லவேயில்லை... எனது கல்லறையில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அது அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது கல்லறை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.




தொடரும்

0 comments: