Friday, November 21, 2008

ஆலயம் - பாகம் 2

மனிதர்களின் எந்த முகங்களும் தோற்றம் கொள்ளாத தொலைந்த காட்டிற்குள் வந்து நிற்கிறேன்! நள்ளிரவு பன்னிரெண்டு மணி மரணித்துக் கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமான மரம் வீடு போல் நிற்கிறது!

கல்லறை கட்டத் தொடங்கலாமா எனச் சிந்திக்கிறேன். முடிவு எடுத்து விட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்கிறேன்.

இரண்டாம் நள்ளிரவு அங்கே வருகிறேன். நான் சுத்தம் செய்து வைத்த இடம் மேலும் அசுத்தம் பண்ணப்பட்டுக் கிடக்கிறது. நினைவுக்கும் நலம் அடிக்கப்பட்டது பார்த்துச் சிரிப்பு வருகிறது! முதல்நாள் இரவு செய்தது போலவே இன்றும் துப்புரவு செய்கிறேன்.

காட்டில் உள்ள விருட்சமொன்றின் கீழே எவருமில்லாத வனாந்தரத்திலே நான் கல்லறை செய்ய மடுத் தோண்டினேன்.

மடுத் தோண்டுவது இலகுவாக இருக்கவில்லை. மண்ணில் தோண்டுவதற்குப் பதிலாக மலையில் தோண்டுவதைப் போல் மிகமிகக் கடினமாக இருந்தது. மண்வெட்டி கூட கூர் மழுங்கிப் போயிற்று. கல்லறைக்கு மடு தயாரெனும் நிலையில், பொழுது காலையை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவுதான் கல்லறை கட்ட மிகவும் சரியான நேரமென எந்தக் காரணமுமின்றி நினைவு தோன்றிற்று.

மூன்றாவது நள்ளிரவு - விரைவாக இந்தக் கல்லறையைக் கட்டி முடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு ஓடிவருகிறேன்.

கல்லறைக்கான மடுவை மூடியுள்ளது. கூடத் தெரியாமல், அந்த இடத்தில் கடந்த இரவு மடு வெட்டிய எந்த அடையாளமும் இல்லாமல், எனது மடு, இல்லாத என்னைப் போலவே, இல்லாது போயிருந்தது! மீண்டும் மடுவைத் தோண்டினேன். நேற்று இரவு மடுவெட்டிய பரிச்சயம் இன்று விரைவாக வெட்ட உதவிற்று. கல்லறைக்கான கற்களை அடுக்கி, சீமெந்து(சீமெண்ட்) குழைத்துக் கலவையிட்டு, அத்திவாரத்தை நிலமட்டம் வரை போட்டுவிட்டேன்.

காட்டில் இனம்புரியாத நிசப்தம் தோன்றிற்று. பறவை இனங்களின் ஒலிகள் மாயமாகின? மரங்கள்கூட அசைவதை நிறுத்திவிட்டன. 'கல்லறையின் பிறப்பிற்கு இயற்கையின் மெளன அஞ்சலியோ இது?' என நினைத்தேன்.

கடந்த மாதம் வெட்டியதுபோதுமென நிறுத்தித் தலை சுமந்து நின்ற முடியை நேற்றுச் சென்று வெட்டி வந்தேன்.

வயிராறச் சாப்பிட்டு நேற்றுக் குளித்த நான், இன்று மீண்டும் குளிக்கையில் ஊத்தைகள்!.

அப்படியெனில், நேற்றைய 'சரி'கள், இன்றைய 'பிழை'களா? நேற்றைய 'போதும்'கள் இன்றைய 'போதாமை'யா? நேற்றைய நிறைவுகள் இன்றைய நிறைவீனமா?

பிழைகளும், போதாமையும் நிறைவீனமும் சரியானவையா?! சரிகளும், போதும்களும், நிறைவுகளும் பிழையானவையா?!

நான்காவது நள்ளிரவு...., நடுக்காட்டில் கல்லறையைக் கட்டி முடிக்கப் போகிறேன்.

நான் கட்டுகின்ற இந்தக் கல்லறைக்கு மிகப்பெரிய அர்த்தமுண்டு. இது சாதாரண கல்லறையல்ல; எனது தூக்கத்தை விற்று விற்று இதைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்! இந்தக் கல்லறை யாருக்கென்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் ஒரு புனிதருக்குத்தான்.

எங்கே எனது கல்லறையின் அத்திவாரம், எங்கே எனது மூன்று இரவுகளின் உழைப்பு? இன்று முடிப்பதற்கு வந்தேன், இன்னும் ஆரம்பமே இல்லாமல் இருக்கிறதே!

மீண்டும் நிலத்தைத் துப்புரவு செய்கிறேன். மீண்டும் அத்திவாரத்தை இடுகிறேன். இன்றைய இரவு பதினைந்து சென்ரி மீற்றர், நிலமட்டத்திலிருந்து மேலே கல்லறை கட்டி விட்டேன். இன்னும் இருமடங்கு உயரம் கட்ட வேண்டும்.



தொடரும்

0 comments: