Sunday, November 23, 2008

ஆலயம் - பாகம் 4

எனது கல்லறை காணக் காதலோடு ஓடி வருகிறேன். என்னே எனது ஆச்சரியம்! கல்லறையின் மேலே ஒரு மரம் முளைத்துக் கல்லறையைத் தகர்த்து, முன்னர் நின்றிருந்த விருட்சத்தையும் கிழைத்து, 'நான் மரங்களுக்கே அரசன்' என்பது போல் நின்றது.!

"ஏ.. யாரது.... ஏன் எனது கல்லறைமேல் கல்லடித்தாய்? இந்த மனிதப் புழு... தனது மூச்சை விடுவதற்காக, தனது வாழ்வைக் கழிப்பதற்காக, தனது உழைப்பைச் செய்வதற்காக, இந்த உலகைப் புரிவதற்காகக் கட்டிய கல்லறையை, சிதைக்கலாமா? இதைக் கட்ட நான் எத்தனை கஸ்டப்பட்டேன். எத்தனை இரவுகளைக் கொலையிலிட்டேன். எத்தனை கனவுகளைச் சிதையிலிட்டேன். நெஞ்சமே வெடிக்கப் பார்க்கிறது! வெடித்து விடமாட்டாயா நெஞ்சமே! நிஜ நிம்மதி உடன் எனக்காகுமே!

கா...கா...கா.. வந்து விட்டாயா? நீ வருவாய் என நான் நினைத்தேன்...."

அந்தப் பெரிய மரத்தின் கப்பிலிருந்து ஒரு உருவம் என்னை நோக்கிக் கேட்டது!

"வந்துதான் விட்டேன். நீ யார்? ஏன் எனது கல்லறை மேல் மரம் வளர்ந்துள்ளது?" ஏதோவொரு துணிவுடன் நான் கேட்டேன்.

"நீ கல்லறை கட்டுவதை ஒவ்வொரு இரவும் நான் கவனித்துக் கொண்டுதான் வந்தேன். நீ கல்லறை கட்டுவது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால்,கல்லறை கட்டும் தகுதி உனக்கு உள்ளதா?"

"கல்லறை கட்ட என்ன தகுதி வேண்டும்? எனக்குக் கட்ட வேண்டும் போல் இருக்கிறது, கட்டுகிறேன்"

"நீ நினைத்தபடி இங்கே எல்லோரும் எல்லாமே செய்ய முடியாது. அதற்கதற்கென சில கற்கை நெறிகள் உண்டு, அதைக் கற்று விட்டு வந்து கல்லறை கட்டு."

"அது என்னால் முடியாது. நான் கட்டுவேனெனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால் கல்லறை கட்டி முடிக்காமல் நான் போக மாட்டேன்."

"படிக்காமல் கல்லறை கட்டாதே!"

சாதாரணமாகக் கற்றுக்கொண்டு செய்வது முழுமை பெறலாம், அசாதரணமாகக் கற்றுக் கொள்ளாமல், ஒரு தேவையின் அடிப்படையில், செய்வது புதுமையாகும்.

முழுமையிலும், பார்க்கப் புதுமை எனக்குப் பிடிக்கும். எனது புதுமை பார்த்து, எவரும் முழுமை செய்து சுகம் பெறட்டும். எனக்கு புதுமையே பிடித்திருக்கு. அது குறையாகக் கிடந்தாலும், எனவே, எனது கல்லறையைக் கட்ட விடு.

"இல்லை, கற்றுக் கொள்ளாத நீ கட்ட முடியாது"

"என்ன, கொடுமை இது! எனக்கு தூக்கம் வரவில்லை, அல்லது நான் தூங்க விரும்பவில்லை. ஒரு கல்லறை படைக்க எந்த பனித சஞ்சாரமுமற்ற காட்டிற்கு வந்தால், இங்கேயும் வந்து என்னை அதிகாரம் செலுத்த நீ யார்? எனக்கு, என்னை எவரும் அதிகாரம் செய்வது பிடிக்காது. நானும் எவரையும் அதிகாரம் செய்வதில்லை, தயவுசெய்து எனது கல்லறையைக் கட்ட விடு."

"முடியாது போ!"

"எனக்கு அதிகாரம் செய்யப் பிடிக்காது, அதனால், உனது அநியாயமான கட்டளையை எதிர்க்கக்கூடப் பிடிக்கவில்லை. இன்னும் இங்கே இருந்து கதைத்தல், எனது படைப்பைப் பாதிக்கும். நான் செல்கிறேன்"

நடந்து கொன்டிருந்தேன். அது மிக மிக நீண்ட நடைடூரம். எனக்கு அந்ர்க இடம் பிடித்திருந்தது. இதுதான் எனது கல்லறைக்கான சரியான இடமெனத் தீர்மானித்தேன்.

வெகு விரைவாகக் கட்டி நிலமட்டத்திற்கு மேலே ஒரு மீற்றர் உயரம் வரை வந்துவிட்டேன். புலர் பொழுதானது. சூரியனுக்கு மரியாதை செய்து சென்று விட்டேன்.

அடுத்த இரவு அற்புதமான இரவாகுமென நினைத்து, எனது கல்லறை தேடி வந்தேன்.

எனது கல்லறையை வழமை போலவே காணவில்லை, ஆனால் மிக மிக அழகாக, நேர்த்தியாகக் கட்டப்பட்ட ஆலயமொன்று அங்கே இருந்தது.


தொடரும்

0 comments: