வாழ்வை விட மரணம் உன்னதமானது! வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட மரணித்துப் போனவர்கள் புனிதமானவர்கள்! ஆலயங்களை விடக் கல்லறைகள் நேசிப்புக்குரியன!
அதிகம் நேசிப்பதனாலா, அடிக்கடி கல்லறைகள் செய்கின்றோம்?!
விழித்துக்கொண்டு கனவு காண்கின்றேன்; கண்மூடிக் கனவைத் தொலைக்கின்றேன்! பஞ்சணையில் படுத்துக் கிடந்தே முள் மூடி சுமக்கின்றேன்!
கண்மூடித் தொலைத்த கனவையும், மொட்டைத்தலையாய்க் கனக்கும் முட்களையும் சுமந்து கொண்டு எங்கேயோ போகிறேன்.
நடு இரவில் எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்! பசிக்கும் பொழுதுகளில் கல்லை உண்கின்றேன். தாகமாய் இருக்கையில் இரத்தம் குடிக்க்றேன்! கல்லை மரத்திலிருந்து பறிக்கிறேன். இரத்ததை மலையைக் குற்றி எடுக்கிறேன். மரத்திலேறுவதற்குப் பாதாளக் குகைக்குச் செல்கிறேன்; மலையைக் குற்றுவதற்கு பஞ்சைப் பயன்படுத்துகிறேன்!
திசை தெரியாத தெருவில் நடந்து போய், இருப்பதாகச் சொல்லும் எல்லாமே இல்லையென்றும், இல்லையென்று சொல்லும் எல்லாமே இருப்பதாகவும் எனது மனக் கோட்டைக்குள் உரத்துச் சொல்லுகிறேன்.
நான் என்னும் என்னை, யார் என்று நானே கேட்டுக் கோபம் கொள்கின்றேன்.
நான் என்னும் என்னை, யார் நானே கேட்டுக் கோபம் கொள்கிறேன். கோபத்தில் சிரிக்கிறேன். சிரிக்கையில் சோகக் கண்ணீர் வருகிறது. கண்ணீர் எனது கன்னங்களில் வழியாமல் பள்ளத்தாக்கிலிருந்து மேலோங்கிச் சீறியடிக்கிறது. பின்பு பூமியிலிருந்து மழையாக வானத்திற்குத் தூவுகிறது. தூவானமே வான மண்டலத்தில் பெரு வெள்ளத்தைக் கொடுக்கிறது. வெள்ளத்தில் நான் நடந்து போகிறேன். நடக்கையில் எனது பாதம் நீரில் மட்டுமே படுகிறது!
நீரின் மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையில் மிகச் சிறந்த நாடகம் நடைபெறுகிறது. இருக்கைகளெல்லாம் காலியாகக் கிடைக்கின்றன. இன்னொரு அரங்கம் நிறைந்து வைகிறது. மேடை மூடியே கிடக்கிறது. கரவொலி காதைத் துளைக்கிறது.
சிறந்த ஓவியக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறுகிறது. நிர்வாணப் புகைப்ப்டங்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. சூரியன் உதிக்கும் பொழுது இருள் தோன்றுகிறது. இப்பொழுது எனது பிரிய நேசம் நினைவுக்கு வருகிறது.
எனது தாயிடம் பால் குடித்த நான் எங்கே? எனது தந்தை தன் தோளில் சுமந்த நான் எங்கே? அ..ஆ... பயின்றபோது இருந்த நான் எங்கே? பத்தாம் வகுப்புப் படிக்கையில் எட்டாம் வகுப்பு மாணவியைக் காதலித்த நான் எங்கே? நான் மட்டுமே நேசித்தவளுக்காகக் கண்ணீர் வடித்த நான் எங்கே? என்னை நேசித்தவளை, நானே வெறுத்தா நான் எங்கே? நகங்கள் பிடுங்கப்பட்டு விரல்கள் முறிக்கப்பட்டு, உணவு மறுக்கப்பட்டு உடைந்து கிடந்த நான் எங்கே?
இன்று கிடைந்து உழன்று கிடக்கும் நானா அந்த 'நான்'கள்?! என்னை உரித்துப் பார்த்தால் அந்த 'நான்'கள் கிடைப்பார்களா? அவர்கள் எனக்குள்ளே உள்ளனரா? அல்லது அழிந்து போயினரா? நான்கள் என்பது நினைவிலி மனதின் தோற்றங்களா? மனம் என்பது வெறும் மாயைதானா? இல்லையேல், இதயத்திலோ, மூளையிலோ அது வாகிறதா? இருப்பதும், இல்லாததும் சுத்தமாக இல்லைதானா?! இன்றிருக்கும் நான் இன்றே அழிந்து கொண்டிருக்க, நாளைய நான், நாளை மறுதினம் மரணிக்கிறேனா?!
Thursday, November 20, 2008
ஆலயம் - பாகம் 1
தொடரும்
ஆக்கம் Dr.கல்லாறு சதீஷ் at 6:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
vanakkam kallaaru sathish padaipu yaavum arputham paarattukkal
r.ravi,editor www.kavimalar.com
Post a Comment