Wednesday, November 26, 2008

ஆலயம் - பாகம் 6

இந்தக் கல்லறையை, நீ கட்டியதாகக் கூறுகின்றாயே! இது நீ கட்டியது அல்ல, இதனைக் கட்டியவர் இறந்து போய்விட்டார்.

இந்தக் கல்லறையை எவருக்காக, எவரின் நினைவுக்காக நீ கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ! அந்த மனிதனைக் கொலை செய்தது நீதான்"

"ஐயோ, இது என்ன அபாண்டமானகுற்றச்சாட்டு, இது எவ்வளவு மோசமான பொய். ஏய்.. உனக்கு மனச்சாட்சியே இல்லையா? ஏன், நீ எனது வாழ்க்கையை இப்படிக் கருவறுக்கிறாய். ஆனாலும் உனது பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்னை எதுவும் பண்ணாது. எனது ஆண்டவர் இதனைப் பொய் என்று நம்புவார்."

"டேய் நான் பொய்யாகத்தான் இக்கதைகளை உன்மேல் கட்டவிழ்த்து விடப் போகிறேன். ஏனென்றால், இனி நீ இந்தக் காட்டுக்கு வந்து கல்லறை கட்டுவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காக"

"ஏன் இந்த வஞ்சகத் தனத்தைச் செய்கிறாய்?"

"ஆண்டவனிடத்தில், என்னைத் திறமையாளனாக நிரூபிப்பதற்கு இவையெல்லாம் எனக்கு பயன்படும்"

"இறுதியில் நீ ஒரு துரோகியென அறிந்து கொள்ளப்பட்டுத் தண்டிக்கப்படுவாய்"

"இங்கே பார்! உனக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று உனக்கும், எனக்கும்தான் தெரியும். இதனை உண்மையென, உனக்கும், எனக்கும் பொதுவான ஆண்டவனுக்கு இன்றே நான் கூறுவேன், அதுமட்டுமல்ல, இதனை இந்தக் காட்டிலிருக்கும் மரங்களுக்கும் கூடக் கூறுவேன், பொய்களினாலே உண்மையான உன்னைச் சாகடித்து, பொய்யான நான் உயிர்வாழ்வேன்."

"இந்தக் காட்டில், இப்படிப்பட்ட உன்னைப் போன்ற துரோகிகளும் இருப்பதனால், வாழ்வைவிட மரணம் புனிதமானது!"

பொழுது இருளகற்றி ஒளிபெறத் தொடங்கியது. எனது க்கல்லறை கரைந்து காணாமல் போனதுடன் எனது வ்ஈட்டுக்கு நான் சென்று விட்டேன்.

எத்தனை முறை முயன்றேன், எனது விருப்பப்படி நேர்மையாக ஒரு கல்லறை கட்டக் கூடவா முடியாமலிருக்கிறது? முகத்துக்கு நேரே, உன்னைத் துரோகியாக்குவேன் என்று மனமறிந்து பொய் சொல்லும் இவனுடன் மோதுவதைவிடப் பேசாமல் தூங்கிப் போய் விடலாம்.

எனது உள்மனம் எனக்கு உதவி செய்ய முன்வருகிறது.

'நீ தொடங்கி விட்டாய், உன்னால் இதுவரை முழுமையான கல்லறை கட்ட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீ கட்டத் தெரியாதவன் என்று அதற்கு அர்த்தம் இல்லை எழும்பு, ஓடு.... கல்லறை கட்டிய உன் கைகளின் லாவகத்தை இன்னும் நேர்த்தியாக்கு மிக விரைவாக, மிக அழகாக அந்தக் கள்ளறையைக் கட்டு, கட்டி முடி!'

எங்கேயிருந்து வந்தது, எனக்கு இந்தப் பலம்.... எதிர்க்க எதிர்க்க நேர்மையானவன் மேலும் வலிமை பெறுவான். அது அவனது ஆன்மாவின் பலமாக இருக்கும். இந்தப் பலத்துடன் எந்தப் பலமும் இலகுவில் வெற்றி பெற முடியாது.

காட்டுக்குள் எப்படித்தான் என்றேனோ, எனக்குத் தெரியாது.





தொடரும்

0 comments: