Tuesday, January 27, 2009

விழுதல் என்பது எழுகையின் வடிவமே!!!(மனவொலி/3)

விழுதல் என்பது எழுகையின் வடிவமே!!!(மனவொலி/3)


எந்த இனம் எம்மை நாடோடியாக்கியதோ,
அந்த இனத்தவருக்காகத்தான் காத்திருந்தோம்,
அவர் வருகையில்தான் அது புரிந்தது.
எங்களின் கடவுசீட்டுக்கள் வாங்கப்பட்டன.
மீண்டும் பல நாட்கள் காத்திருப்பு தொடர்ந்தது.
காதலுக்காகக் காத்திருத்தல் சுகமாக இருக்கலாம்,
கடவுச்சீட்டுக்காகக் காத்திருத்தல்
எத்தனை வலி என்பதை அனுபவித்து அறிந்தேன்.
எங்களிடம் இருந்த பணங்கள் வாங்கப்பட்டன.
எங்களில் பலர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
நாம் சென்ற பாதையை இத்தொடரில்,
மெளனத்தின் ஒலியில்தான் பேசமுடியும்.
இன்னும் அந்தக்கணங்களை
இதயத்தில் ஏற்றி நினைத்துப்பார்க்கையில்
உடல் ஒரு கணம் அதிந்து துடிக்கும்.

நகரும் வீட்டில் நாங்கள் ஏற்றப்பட்டோம்.
ஏற்றியவர் ஒரு வெள்ளைக்காரர்.
நள்ளிரவில் அந்தப் பயணம் தொடங்கியது.
அது ஒரு நாட்டின் எல்லையை,
அந்த நாட்டுப்படைக்கே தெரியாமல் கடந்து,
நுழைந்து கொள்ளவேண்டிய பயணம்.
அது எனக்கு புரிந்து போனதால்,
தூக்கம் கெட்டேபோனது.
சிறு துவாரத்தினூடாக வாகனத்திலிருந்து
வீதியைப்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
இயற்கைக்கடன்களுக்குக் கூட
நிறுத்தப்படாமல் ஓடிய வாகனம்,
திடீடரென நிறுத்தப்பட்டது.
அது வெறும் ஜந்து நிமிடங்கள்தான்.
மீண்டும் ஓடுகிறது,ஓடுகிறது ஓடிக்கொண்டேயிருக்கிறது.
நேரம் அதிகாலை ஜந்து மணி.
இப்போது எங்கள் அனைவரையும்
இறங்குமாறு பணித்தார் அந்த வெள்ளைக்காரர்.
என் பாதங்கள் தொட்ட
அந்தப் பூமி சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநகரம்.
(மனவொலி தொடரும்)

0 comments: