Monday, January 19, 2009

விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!

விழுதல் என்பதும்

எழுகையின் வடிவமே!!!

இதுவொரு புதிய மனவொலித் தொடர்... .

-*கல்லாறு சதீஷ்-*.....
1.


மலர்களின் வாசம் பிடிக்கவில்லை.
குயில்களின் கீதம் பிடிக்கவில்லை.
மயில்களின் நடனம் பிடிக்கவில்லை.
இப்படி இன்னும் என்னென்ன பிடிக்கவில்லை?
பைத்தியம் பிடிக்கவில்லை.
கூடாது.
பிடிக்கக்கூடாது.
பைத்தியம் பிடிக்கக்கூடாது.
கூடாது.
பிடிக்கக்கூடாது.
பொலீசோ,இராணுவமோ
மீண்டும் என்னைப்பிடிக்கக்கூடாது.
ஆன்மா தவிக்கிறது.
கணங்கள் ஒவ்வொன்றும்
அனாதைப் பிணமாவேனோ
எனும் எண்ணம்,என்னைத் திணறச் செய்கிறது.
வந்துவிட்டேன்.
விமான நிலையத்தின் இறுதி நிமிடங்கள்
என்னை உந்தித்தள்ளுகிறது.
இறுதியாக இலங்கைத்தீவின் மடியிலிருந்து
என் பாதங்கள் தூக்கி விமானத்திலேறுகிறேன்.
அதோ!
பிறந்தது முதல் வாழ்ந்து வந்த அந்தத் தேசத்தை விட்டு,
காற்றை உதைத்து,
விமானப்பறவை மேலே மேலே
மேகங்களைக் கிழிக்கிறான்.
கண்ணாடியூடாக பூமிப்பந்த்தைப் பார்க்கிறேன்.
இது என் கிராமமாக இருக்குமோ?
இனி நான் மீண்டும்
என்று இத்தேசம் வருவேனோ?
என் தேசத்தைப் பிடித்த நோயின் கோரம்
என்று தீர்ந்து போகுமோ?
போகிறேன்.
என் தேசம் விட்டு,
என் கிராமம் விட்டு,
என் உறவுகளை விட்டுப் போகிறேன்.

0 comments: