இசைதான் சென்னைக்கு இழுத்து வந்தது.
குல்தீப் பய்
வயது - 27
பாட ஆரம்பித்தது - 6 வயதில்
படிப்பு - BCA கபியூட்டர்
குரு - N.P ராமசாமி & O.S தியாகராஜன்
தாய்மொழி கொங்கிணி. எனவே வீட்டில் அந்த மொழியில் தான் பேச்சு எல்லாம். வெளியே போனால் மலையாளம் அல்லது ஆங்கிலம்.
கொச்சியில் படித்து வளர்ந்த இளைஞர் குல்தீப் பய். சென்னைக்கு வந்தது 2002 இல் தான். இந்த ஆறு வருடங்களில் தமிழில் பேசக் கற்றுக் கொண்டதோ, பாடக் கற்றுக் கொண்டதோ பெரிதல்ல. சங்கத் தமிழ் போன்ற கடினமோ அகநாநூற்றுப் பாடல்களையே "ஐந்திணை" பற்றிய டாக்குமென்டரிக்காகப் பாடியிருக்கிறார் குல்தீப்.!
கொச்சியில் இருந்த வரையில் N.P ராமசாமி என்பவரிடம் இசை கற்றுக் கொண்டுவிட்டு, சென்னை வந்த பிறகு O.S தியாகராஜனிடம் இரண்டு வருடங்களாக கர்நாடக இசை பயின்று வருகிறார் குல்தீப்.
குல்தீப் BCA எனப்படும் கொம்பியூட்டர் அப்ளிகேசன் தான் கல்லூரியில் படித்தார். "கர்நாடக இசை மேல் உள்ள காதலால்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். வாழ்க்கையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது!" என்கிறார் இந்த 27 வயது இளைஞர்.
பிறகு. மெட்ராஸ் யூனிவர்வர்சிட்டியில் மியூசிக் டிபார்ட்மென்டில் சேர்ந்து முதல் ராங்க் மட்டுமல்ல தங்கப்பதக்கமும் பெற்றது 2005 ம் வருடம்.
மூன்று வயதிலேயே பாட்டுக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் குல்தீப். ஆறாவது வயதில் அரங்கேற்றம். மட்டாஞ்சேரி என்ற கொச்சியின் புறநகரில் உள்ள கெளட சாரஸ்வத் சேவா சமிதி இடம் கொடுத்தது.
"S. ஜானகி, O.S.அருண், வாணி ஜெயராம் ஆகியவர்களுக்கு ஹார்மோனியம் வாசித்திருக்கிறேன். சென்னை வந்த பிறகு மிருதங்கம் வாசிக்க மன்னார்குடி ஈசுவரன் சாரிடம் கற்றுக்கொண்டேன். கொச்சியில் இருக்கும்போது திரு. ஹரிஹரன் என்ற கலைஞரிடம் வயலின் ஆரம்பத்தில் கற்று வந்தேன்" என்கிறார் குல்தீப்.
குடும்பத்தில் பெற்றோருக்கு இசையில் ஆர்வம் இருந்ததே தவிர, முறையாகப் பாடுபவர்கள் அல்ல. (அப்பா சிண்டிகேட் வங்கி அதிகாரி, அம்மா தபால் துறை ஊழியர்.)
ஆனால் அப்பாவின் குடும்பத்தினர் பஜன் எல்லாம் பாடுவார்கள். அம்மா படிக்கும்போது ஸ்கூல்ல மியூசிக் டீச்சராக இருந்த ஆன்டனி பாகவதர், எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருந்தார். அதனால் அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். "ஸ்வர ஞானம் இருக்கிறது. அந்த ஞானம் கூடவே பிறந்தமாதிரி எனக்குத் தெரிகிறது." என்றாராம் ஆன்டனி பாகவதர்."
சென்னைக்கு வருகிறவரை பழையகால வித்வான்கள் யாரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லையாம் குல்தீப்! "உண்மையாத்தான் சொல்றேன். இங்க வரவரைக்கும் செம்மங்குடி, கே வி என் எல்லாம் யார்னே எனக்குத் தெரியாது என்று சொல்லிச் சிரிக்கிறார்.
"மெட்ராசுக்கு வந்தப்புறம்தான் இந்தப் பெரியவர்களோட பாட்டெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன். கர்நாடிக் மியூசிக் இந்த அளவுக்கு பரந்து விரிந்தது. பிரமாண்டமானது என்பது இங்கே வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
குல்தீப் பய்க்கு அந்த பாணி - இந்த பாணி என்று சொல்வதில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. சாகித்தியத்துக்கும் பக்தியுணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது அவர் கருத்து.
பாவத்துக்கும் நிறைய இடம் கொடுக்கணும் சிலர் இதை என்னிடம் கண்டு கொன்டு பாராட்டியிருக்கிறார்கள். அப்படி நான் உணர்ச்சிமயமாகப் பாடும்போது அதில் அம்பாளைக் காண முடிந்தது என்று பாராட்டியிருக்கிறார்கள் என்கிறார் குல்தீப்.
முழுநேர கர்நாடக இடைச் கலைஞானாக இருக்க முடியுமா? அதாவது கர்நாடக இசைப் பாடகனாகவே இருப்பது வாழ்க்கைக்கு உதவுமா?
நிச்சயமாக முடியும். ஆரம்பகால பிரச்சனைகளை சமாளிக்கிற துணிச்ச்சல் இருந்தால் சங்கடங்களை எதிர்கொள்ளும் சாமர்த்தியமும் இருந்தாக வேண்டும். அது நம்மைப் பொறுத்தது. நிறைய வாய்ப்புக்கள் இருக்கு. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நூறு சதவீதம் நாம் இருந்தா வெற்றி நிச்சயம்.
சீரியஸ்ஸா எடுத்துக்கொண்டா சம்பாதிக்கின்றதுன்னு இருந்தா ஐ டி ல வேலை பார்க்கிறவரைவிட பத்துமடங்கு சம்பாதிக்கலாம். இதுல இன்னொரு வசதி இருக்கு. ஒவ்வொரு நிமிசமும் உங்களுக்குப் பிடிச்சதையே செய்யலாம். அதை அனுபவிக்கலாம். வேலைல ஈடுபட்டபடியே அப்படியே சம்பாதிக்கவும் செய்யலாம். நீங்க வேலை செய்யாத மாதிரிதான் உங்களுக்குத் தோணும். அதனால் புதியதைக் கண்டு பிடிக்கணும், நான் கர்நாடக இசையோடு நின்றுவிடவில்லை, வெஸ்டர்ன் கிளாசிகல் கத்துக்கிறேன். பியானோ வாசிக்கக் கத்துக்கறேன் அதுவும் பியூர் கிளாசிகல், சிம்போனி வாசிக்கும்போது இது தேவை
சினிமால பாடற ஆசை உண்டா?
பிலிம் மியூசிக்ல நிச்சயமா இன்டரஸ்ட் உண்டு. இப்போ சமீபத்துல ஸ்விட்சர்லாந்துல இருக்கிறா தயாரிப்பாளரோட 'டமில் வெட்டிங் (தமிழ் திருமணம்) படத்துக்கு நாலு பாட்டு பாடியிருக்கேன். ஒருபாட்டு நானே மெட்டமைச்சு பாடியிருக்கேன். மூணு பாட்டு இங்கிலீஷ்ல இருந்து தமிழ் பண்ணியிருக்காங்க.
இந்த வாய்ப்பு வந்தது எப்படி?
ஆஸ்திரேலியால மெல்பர்ன் நகரத்துக்குப் போனபோது அங்கே ஒரு நிகழ்ச்சி, சதீஷ் என ஒருவர் வைரமுத்து சாருக்கு நெருங்கிய நண்பர். நான் பாடறதை ரொம்ப ரசிச்சுக் கேட்டார். முடிஞ்சதும் சதீஷ் என்கிட்டே ' நான் ஒரு பாட்டு இப்போ எழுதுறேன், ட்யூன் பண்ணுவீங்களா? என்று கேட்டார். நானும் மெட்டுப்போட்டுப் பாடிக்காட்டினேன். உடனே அவரோட மொபைல்ல ரிகார்ட் பண்ணிக்கிட்டார். சுவிஸ்ல அந்த மியூசிக் டைரக்டர் பால்ஸ் பேக்மேன் (Balz Backman) கேட்டார். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாட்டெல்லாம் எழுதின பிறகு சதீஷ் எனக்குக் கொடுத்தார். பாடினேன். அப்புறம் இங்கே வந்து எல்லா பாட்டையும் ரிகார்ட் பண்ணினார் என்றார் குல்தீப்
எனக்கு காட் பார்தர் யாரும் கிடையாது. ஆனால் கடவுள் மேல நிறைய நம்பிக்கை உண்டு. கடுமையான உழைப்பு மேலே நம்பிக்கை உண்டு.
பாட்டுத்தான் தொழில்னு முடிவு செஞ்சபோதுகூட எங்க இருந்தும் ஒரு பாஸிடிவ் சப்போர்ட் யாரும் தரலே. எனக்கு அப்போ மெச்சூரிட்டியும் போதாது. என் அப்பா அம்மா என்னைப் பற்றி நம்பிக்கை இல்லாம இருந்திருப்பாங்க. என்னைப் பற்றி கவலைப்பட்டிருப்பாங்க. ஆனா என்னோட மியூசிக் ஆல்பம், "அத்விதா" வெளியீட்டு விழாவுல ஞானகியம்மா, பி பி சீனிவாஸ், பி.எஸ்.நாராயணசாமி சார், ஓ எஸ் தியாகராஜன் சார், மன்னார்குடி ஈசுவரன் சார் எல்லாரும் இருந்த மேடைல என் அப்பா அம்மாவும் இருந்தாங்க அப்பதான் என்னை ஒரு கன்ட்ரட் பர்சன்ட் மீயூசிஷியனா ஏத்துக்கிட்டாங்க அப்பதான் என்னோட அப்பா அம்மா கூட புரிஞ்சுக்கிட்டாங்க
கோயிலுக்குப் போறதுண்டா?
போவேன் அசாத்திய கடவுள் நம்பிக்கை உண்டு. எங்க அம்மாவும் அப்பாவும் விடிகாலைல மூணு மணிக்கெல்லாம் எழுந்திருந்து குளிச்சுட்டு தோட்டத்துல் இருக்கிற அவ்வளவு பூக்களையும் பறிச்சுட்டு வந்து மாலை தொடுத்து வீட்டுல சுவாமிக்குப் போட்டுட்டு பக்கத்துல இருக்கிற ஆஞ்சநேயர் கோயிலுக்கும் கொடுப்பாங்க.
லலிதா சகஸ்ரநாமமும் விஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லாத நாளே கிடையாது. கடவுள் பக்தியோட நம்பிக்கையும் உண்டு அவர்களுக்கு. ஆறேழு வருசத்துக்கு முன்னால என் தகப்பனார் மொட்டைமாடியில் இருந்து மாங்காய் பறிச்சிட்டு இருந்தப்ப கால் தவறி விழுந்துட்டார். கால் அடிபட்டு கணுக்கால் உடைஞ்சுபோச்சு. ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணினோம். மூணு மாசம் பெட் எடுக்கணும். அப்புறம்தான் வேலைக்குப் போகலாம் நாங்க. ஆனா ஒரே வாரத்துல குணமாகி வீட்டுக்கு வந்துட்டார். ஒருமாசம் ஆனவுடனே பழையபடி வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டார். அந்த ஸ்பிரிச்சுவல் பவர் அல்லது சக்தி, எனக்கும் மியூசிக்ல உதவுறது. நாம என்னதான் செஞ்சாலும் கடைசில நல்லவன் நல்லதையே நினைக்கிறவன் செய்யுறவன் என்ற பெயர் இந்த வாழ்க்கை ல முக்கியம் சார். அப்படி செய்ய தூண்டுறது தெய்வபக்தி இல்லியா?
குல்தீப் பய் மிகவும் தெளிவாக இருக்கிறார் சங்கீதம் என்றால் என்ன என்பதில்
நம்ம மியூசிக்கை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதாது. அது ஒரு பக்கம்தான். நான் அப்படி ஒரே வகை இசையோடு நின்றுபோய்விடப் போவதில்லை. கர்நாடக இசை என்று இல்லை. எல்லா இசையிலுமே மொத்தம் 12 ஸ்வரங்கள்தாம் என்கிறார்
பொழுதுபோக்கு?
இசைதான்
முடிவாக நான் மிகுந்த திருப்தியுடன் வாழ்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. 2006 வரை நான் ஆகாய விமானத்தையே பார்த்ததில்லை. ஆனால் 2007,2008 இல் நான்குமுறை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பயணம் செய்தேன். ஆஸ்திரேலியாவுக்கு மூன்று தடவை போய் வந்தேன். நியூஸிலாந்துக்கு மூன்று தடவை.
இந்தியாவில் கச்சேரிகளும் வந்துகொண்டிருக்கின்றன. என் இசைப் பயனம் சுகமாகவே இருக்கிறது. என்கிறார் குல்தீப் பய்.
0 comments:
Post a Comment