Friday, January 30, 2009

விழி வெடித்தழுகிறோம்.

விழி வெடித்தழுகிறோம்.


எனது நேசச் சொந்தங்களே!
உங்களின் வலி பார்த்து,
விழி வெடித்தழுகிறோம்.
இதயங்கள் உடைந்து கதறுகிறோம்.
உங்களை ஆரத்தழுவி
அன்பு சொல்ல வழியற்று குமுறுகிறோம்.

உலகத்தின் கடைக்கண்
பார்வைக்காக கையேந்தி நிற்கின்றோம்.
அடை மழையாய்க் கொட்டும்,
குண்டுமழை நின்று போகக் கூடாதா?
ஒரு மாற்றம் வராதா- என்று
கனவிலும் வேண்டுகிறோம்.

எமது உடன்பிறப்புகளாகிய
உங்களைக் கொல்லும்
காட்சிப்படிவங்களைப்- பார்த்து
நிலை குலைந்து போகிறோம்.
நாம் காணும் காட்சியெல்லாம்
கனவாகப் போகாதோ- என்று
கண் மூடித்திறக்கிறோம்.

பிஞ்சுக் குழந்தைகளே!
வண்டுக்கடி தாங்கமுடியா
உங்களின் பிஞ்சுடம்பு,
குண்டின் அடி.
எப்படித்தான் தாங்குவீர்களோ?
நெஞ்சுடைந்து விம்புகின்றோம்.

எம் தமிழே!
உங்களை அழித்துவிட,
மாபெரும் சுனாமி,
மனிதவடிவில் படையெடுப்பதை,
நிறுத்திட,
ஒரு அதிசயம் நிகழாதோ?
மகளும்,மகனும்,மனைவியும்
கண் மூன்னே கதறி மாண்ட
காட்சிகண்ட சகோதரனே,
உன்னைக் கொல்லவரும்
குண்டைக் காத்திருக்கும் விதிக்கு,
நான் என்ன விலை கொடுப்பேன்,
உன்னைக் காக்க.
நீ வாழ வணங்குகிறேன்.

ஒருவர் உணவைப் பத்துப் பேர்
பகிர்ந்துண்ட சோதரங்களே,
உங்கள் பசி தீரத் தொழுகிறேன்.

காயத்துக்கு கட்டுப் போட
பழைய துணி கூட இல்லாது
கதறும் சொந்தங்களே,
உங்கள் வலி தீரப் பிராத்திக்கிறேன்.

எந்தத் துணையும் இன்றி
கூவி வந்த செல்லடியில்,
சிதறிச் செத்த சோதரனே, சோதரியே
உனதாத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

என்றும் உங்களின் நினைவில் கண்ணீருடன்
கல்லாறு சதீஷ். (30.01.2009)

1 comments:

butterfly Surya said...

வேதனையிலும் வேதனை..

நல்லது நடக்கட்டும்.

பிரார்தனையுடன்

சூர்யா
சென்னை