Tuesday, January 20, 2009

"தேடிய இயந்திரம் ஓய்ந்து இன்றுடன் 31 நாட்கள்"

டாக்டர் இந்திரகுமாருக்கு மலராஞ்சலி.

டாக்டர் இந்திரகுமார் மறைந்து இன்றுடன் 31 நாட்கள் (20.01.2009) நிறைவடைகின்றது.


லண்டன் மாநகரிலே, இன்றுடாக்டர் இந்திரகுமார் அவர்கள் அமரத்துவம் அடைந்த 31வது நாள் அனுட்டானங்கள் நடைபெறுகிறது. இந்த வேளையில் டாக்டர் இந்திரகுமார் அவர்கள், கிருஷ்ணசாமி அவர்களுடைய 31வது நாள் அனுட்டானங்கள் வேளையில் வீரகேசரியில் 08.01.2006 அன்று எழுதிய கட்டுரையை எனது பதிவுகள் பக்கத்தில் நினைக்க விடுகிறேன்.

காரணம் கிருஷ்ணசாமி ஐயா எனது மனைவி வழியில் எனக்கும் தாத்தா. அவரை நான் நேரிலே பார்க்காது விட்டாலும், தொலைபேசியில் பேசி மகிழ்ந்துள்ளேன். எனக்காக அவர் கொடுத்துச் சென்ற நூல்கள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன. அரியபல நூல்கள் சேர்த்தே புகபெற்ற கிருஷ்ணசாமி ஐயா மறைந்த செய்தியை அமரர் டாக்டர் இந்திரகுமாருக்கு தொலைபேசியில் நான்தான் தெரிவித்தேன். அப்போது என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கவும் தன்னெழுச்சியாகவும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் எழுதிய கட்டுரைதான் கீழே தொடர்வது. அமரர் கிருஷ்ணசாமியின் 31ன் போது அமரர் டாக்டர் இந்திரகுமார் வடித்த வார்த்தைகள், அவரின் 31ன் போது.......


கிடைத்தற்கரிய நூல்களை வாங்கிச் சேகரித்த

"Google" கிருஷ்ணசாமி


கணினிகளைப் பாவித்த அனுபவம் உள்ளவர்களுக்கு இணையத் தளங்களைச் சல்லடை போட்டு ஆய்வுசெய்யும் கூகிள்(Google) என்ற தேடல் இயந்திரத்தைப்(Search Engine) பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. கணினியில் பாவிக்கக் கூடிய தேடல் இயந்திரங்களுக்குள் மிகப் பாரியதும் ஆற்றல் மிகுந்ததும் வேகம் உடையதுமாக கூகிள் விளங்குகிறது.

சமீபத்தில் எனது கணனியில் லெமூரியா என்ற சொல்லை கூகிளில் பதிவுசெய்து அதனைத் தேடுமாறு பணித்தேன். ஒரு நிமிடங்களுக்குள் அந்தப் பெயர் கொண்ட ஒரு நீண்ட பட்டியலை கணினி முன் வைத்தது. குமரிக்கண்டம் என்றும் அழைக்கப்படும் லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய குறிப்புக்களை மட்டுமல்லாது, அதனைப்பற்றி வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலையும் மட்டுமல்லாது, லெமூரியா என்ற பெயர் கொண்ட ஏனைய விஷயங்களின் பட்டியலையும் கூகிள் வெளிப்படுத்தியது.

லெமூரியாக் கண்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலை எடுத்துப் பதிவாக எடுத்துக்கொண்டேன். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு அந்த நூல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்துக்கு எனது மனதை தயார்படுத்திக் கொண்டேன்.

கூகிள் தேடல் இயந்திரத்திற்கு நன்றி

கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் வரலாறு என்னும் பாரிய துறையில் ஆய்வுகள் செய்ய நான் முனைந்தபோது பல முன்னோடி வரலாற்று நூல்களைத் தேடவேண்டி வந்தது. அந்த நூல்கள் இருக்கக்கூடிய புத்தக விற்பனை நிலையங்களோ நூலகங்களோ லண்டனில் இல்லை. எனது நண்பர்கள் மூலம் இலங்கையிலுள்ள புத்தகசாலைகளில் தேடியபோது அந்த நூல்களின் பிரதிகள் விற்றுத் தீர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற பதிலே கிடைத்தது.

கந்தையா கிருஷ்ணசாமி என்ற ஒரு தமிழர் கொழும்பில் வசிப்பதாகவும் அவருடன் தொடர்பு கொண்டால் நூல்களைப் பெறும் வாய்ப்பு உண்டு என்றும் எனது நண்பர் ஒருவர் தகவல் தந்தார். அவரது தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.

இலண்டனிலிருந்து அவருடன் தொலைபேசியில் பேசினேன். எனது ஆய்வுக்குரிய வரலாற்றுப் பகுதிகளை ஓரளவு விளக்கினேன். இவைகள் பற்றிய நூல்கள் வேண்டும் என்றும் சொன்னேன். அவர் என்னை மறுநாள் மாலை மீண்டும் பேசச்சொன்னார். பேசினேன். இரண்டொரு நூல்களின் பெயரைச் சொல்லுவார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ நான் கேட்ட துறையில் பத்துப் பதினைந்து நூல்களின் பெயர்களையும் விலைகளையும் தந்தார். ஒரு புதையலே கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட அந்த நூல்களுக்கு மிகவும் நியாயமான விலை சொன்னார் அவர்.

எனது நண்பர்கள் அவரிடம் விரைந்தனர். நூல்களை வாங்கி கூரியர் மூலம் எமக்கு அனுப்பி வைத்தனர். எனது ஆய்வுகள் தொடர்ந்தன.

எனக்கு அதிக உதவியாக விளங்கியது உலகப் புகபெற்ற கூகிள் தேடல் இயந்திரமா? அல்லது வெள்ளவத்தையைச் சேர்ந்த கந்தையா கிருஷ்ணசாமியா?

எனது வாக்கு கிருஷ்ணசாமிக்கே. தேடல் இயந்திரம் எனக்கு நூல்களின் பட்டியலைத் தந்து அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்தையும் தந்தது. ஆனால் கிருஷ்ணசாமி ஐயாவோ எனக்கு நூல்களின் பட்டியலையும் தந்து நியாய விலையையும் சொல்லி நூல்களையும் அளித்துள்ளார். இத்தனையும் இரண்டே இரண்டு நாட்களுக்குள் இரண்டு கண்டங்களுக்கிடையே நடைபெற்று முடிந்துவிட்டன.


எனக்கு இத்தகைய இன்ப அனுபவத்தை அள்ளித்தந்த அந்த அபூர்வ மனிதர் "கூகிள்" கந்தையா கிருஷ்ணசாமி 31 நாட்களுக்கு முன்னர் தனது இயக்கத்தை தனது 88ஆவது வயதில் நிறுத்திக்கொண்டு மீளாத்துயில் ஆழ்ந்துவிட்டார்.

அவருடன் எனக்கு ஏற்பட்ட இந்த முதற் தொடர்பை அடுத்து ஆறு மாதங்களின் பின் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவரைக் கண்டு பேசவேண்டும் அவரிடம் மேலும் நூல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வ மிகுதியுடன் அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

86 வயசுக்குரிய உடல் தளர்ந்த தோற்றம். 40 வயதுக்கேற்ற உளச்சுறுசுறுப்பு, ஊக்கம் பணிவன்புடன் கூடிய இன்ப சுபாவம் என்பன கூடிய ஒரு இளம் முதியவரைச் சந்தித்தேன். அவர் நூல் சேகரிப்பவர் மட்டுமல்ல. நூல்களை ஆழமாகக் கற்று அவை தந்த அறிவையும் நினைவுகளையும் கணினி போல் மனதில் பதித்துக் கொண்டவர் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி ஆய்வு பற்றிய ஒரு தமிழ் நூலை எழுதி வெளியிட்டு அதற்குரிய ஒரு தமிழ்நூலை எழுதி வெளியிட்டு அதற்கு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது நான் தானா? என்று அவர் கேட்டார். ஆம் என்று பதிலளித்தேன்.

1971 இல் வீரகேசரி வாரமலரில் "மண்ணில் இருந்து விண்ணுக்கு" என்ற கட்டுரைத் தொடரை ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எழுதி வந்தேன். வீரகேசரி நிறுவனம் தனது மாதமொரு நூல் வெளியீட்டுத்திட்டத்தின் கீழ் சிறுகதைத் தொகுப்புக்களையும் நாவல்களையும் மட்டுமே வெளியிட்டு வந்தது.

மண்ணில் இருந்து விண்ணுக்கு கட்டுரைத் தொடரை நூலாக வெளியிட வெளியீடுகளுக்குப் பொறுப்பாயிருந்த பாலச்சந்திரன் தீர்மானித்தார். நூலும் வெளிவந்தது. அதற்கு இலங்கையின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசான சாகித்திய மண்டல விருது 1973 இல் கிடைத்தது. அறிவியல்துறைக்கு இத்தகைய ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டது. அதுதான் முதல்தடவையாகும். 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்தன.

2003 இல் நான் கிருஷ்ணசாமி ஐயாவைச் சந்தித்தபோது அந்த நூலின் ஒரு பிரதிகூட என்னிடம் இல்லை. வீரகேசரி நிறுவனத்திடம்கூட பிரதியேனும் இருக்கவில்லை. இதைப்பற்றி கிருஷ்ணசாமி ஐயாவிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டேன்.

அதன்பின் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எனக்குத் தேவையான சில வெளியீடுகள் பற்றி அவரிடம் சொன்னேன். வழக்கம் போல மறுநாள் தன்னைச் சந்திக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்தநாட் சந்திப்பின்போது நான் கேட்டுக்கொண்ட வரலாற்று நூல்களை அவர் தேடிக்கொண்டு வந்திருந்தார்.

நூல்களுக்கான விலையைக் கொடுத்து அவற்றை மனமகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.

"டாக்டர், உங்களுக்குத் தருவதற்கு ஒரு பரிசும் வைத்திருக்கிறேன்" என்றார் அவர்.

வியப்புடன் அவரை நோக்கினேன்.

"மண்ணிலே இருந்து விண்ணுக்கு" நூலின் பிரதி ஒன்றை எடுத்து என் முன்னால் வைத்து அதைத் தனது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

1973 இல் அந்த நூலுக்கான சாகித்திய மண்டலப் பொரிசை இலங்கை ஜனாதிபதி சேர் வில்லியம் கோபல்லாவ அவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட போது ஏற்பட்ட அதே புளங்காகிதத்துடன் நான் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்த அதன் பிரதியை 2003 இல் கிருஷ்ணசாமி ஐயாவிடமிருந்து பரிசாகப் பெற்றது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு சகானுபவம் ஆகும்.

கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டில் தான் வாழ்நாளில் தேடிய பல்லாயிரம் நூல் செல்வங்களுடன் கிருஷ்ணசாமி வாழ்ந்து வந்தார். இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனது பேத்தியுடன் வசிக்க வெள்ளவத்தை வந்து சேர்ந்தார்.

அவரிடம் இருந்த கிடைத்தற்கரிய நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், எப்போதும் வந்து சென்றனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா தான் ஆற்றியா சென் பிரான்சிஸ்கோ சொற்பொழிவினைத் தேடி எடுப்பதற்கு கிருஷ்ணசாமி ஐயாவின் உதவியை நாடினார். ஐயாவைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல தனது காரைக் கொம்பனித்தெருவுக்கு அனுப்பி வைத்தது ஒரு வரலாற்றுப் பதிவு ஆகும்.

ஐயாவின் புகழ் கடல் கடந்த பிரிட்டன்வரை பரவியிருந்தது என்றால் பாருங்களேன்.

பல்லாண்டு காலம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சபாநாயகராக விளங்கிய திருமதி பெற்றபூத் ரொய்ட் அம்மையார் கூட பி.பி.சி நிருபர் ஜோன் ரெற்றியையும் அழைத்துக்கொண்டு ஐயாவைச் சந்திக்க வந்திருக்கிறார். தனக்குத் தேவைப்பட்ட அரிய நூல்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார்.

எலிசெபெத் மகாராணியும் அவரது குழுவினரும் 1981 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது பிரித்தானிய அரசு சம்பந்தப்பட்ட புராதன ஆவணங்கள் சிலவற்றை அவர் மகாராணியாருக்கு வழங்கியிருக்கிறார். காலஞ்சென்ற ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேகம், மற்றும் வெள்ளிவிழா சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகளையும் கொழும்பில் உள்ள இராணி மாளிகையைப் புனருத்தாரணம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட திட்டங்களும் இவற்றில் அடங்கியிருந்தன.

இவற்றைஅன்புடன் பெற்றுக்கொண்ட மகாராணியின் குழுவினர் தமது தாயகம் திரும்பியதும் கிருஷ்ணசாமி ஐயாவுக்கு நன்றி தெரிவித்து மகாராணியின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தினூடாக ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்தனர். ஐயா கொடுத்த பத்திரங்கள் பிரித்தானிய அரச நூலகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அக்கடிதம் தெரிவித்தது. இக் கடிதத்தை பெருமையுடன் பிரேம் போட்டு வைத்திருந்தார் கிருஷ்ணசாமி ஐயா.

கிருஷ்ணசாமி ஐயா தமது வாழ்க்கையில் திரட்டிச் சேமித்து வைத்த பொக்கிஷங்களான நூல்களைத் தனது பேத்திக்கு உயில் எழுதி வைத்து விட்டு ஒரு மாதத்திற்கு முன்னர் மீளாத்துயிலில் ஆழந்தார்.

அவரது நூல்கள் நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்லன. இந்த வீட்டுக்கான வாடகை மாதத்திற்கு 2ஓஓ ரூபாய்.

இன்று கூகிள் கந்தையா கிருஷ்ணசாமி அவர்கள் அமரத்துவம் அடைந்த 31வது நாள் அனுட்டானங்கள் நடைபெறுகிறது. இந்தவேளையில் அவரது அமரத்துவத்திற்கு வழிகோலிய காரணங்களை முன்வைப்பதில் மனநிறைவு அடைகிறேன்.

0 comments: